‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’ என்றுதான் தனது பதவியேற்பு உரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். 2021ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதியில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
மக்களுடன் மக்களாக…
வெளிநாட்டில் இருந்து உள்ளூர் வரை முதலமைச்சர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவரை காண மக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர். அரசு பயணங்கள் என்றால் வெறும் கூட்டத்தில் மட்டும் பங்கேற்காமல், நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பேரார்வம் கொண்டவராக உள்ளார். மன்னராட்சியில் மன்னர்கள் நகர் உலா வருவது போல் இல்லாமல், மக்களுடன் மக்களாக நின்று மக்களாட்சியின் மாண்பை காக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் களத்தில் வேரூன்றியிருக்கிறார். முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தற்போது வரை இடைவிடாமல், அரசு நலத்திட்டம் வழங்கும் விழா, அரசு முறை பயணங்கள், கட்சி பயணங்கள் என 70 வயதை தொட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்கள் அசாதராணமானவை என்றே சொல்லலாம்.
சுற்றிச்சுழலும் முதலமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலினின் பயணங்களை சற்று பின்னோக்கிப் பார்த்தால் மலைப்பாகவே இருக்கும். 2021ஆம் மே மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை மட்டும் 655 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். ஓராண்டில் மொத்தமே 365 நாள்களாக இருந்தாலும், அவர் ஒருநாளிலேயே இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். இந்த 655 நிகழ்ச்சிகளில், 551 நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிதான். மொத்தமாக சொல்வதாக இருந்தால், கடந்த ஆண்டில் (2022) மட்டும் 9 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, களத்தில் மக்களை சந்தித்துள்ளார். இதில், சில நாள்கள் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், கால் வலி, முதுகு வலி காரணமாக சில நாள்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தார். இத்தகைய இடர்பாடுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் 50 நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்றிருப்பார். ‘நான்’ என்றில்லாமல் அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றிச்சுழன்று பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர், ஜன.13ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசியபோது,”என்னை வருத்திக் கொண்டு நான் அலையவில்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் நான் ஓயாத அலைச்சல்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் என்னுடைய இயல்பில் தான் இருக்கிறேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. தலைவர் கருணாநிதி எங்களுக்கு இப்படித்தான் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்கள். அவரிடம் கற்ற பாடங்கள் என்னை இப்படி உழைக்கத் தூண்டுகிறது” என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில், அவர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் மேற்கொண்ட முக்கிய சுற்றுப்பயணங்களை இங்கு காணலாம்.
மழை வெள்ள பாதிப்பு ஆய்வு
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இரண்டு முக்கிய பிரச்னைகளை தீர்வு கண்டுள்ளது. ஒன்று கொரோனா தொற்று பரவல்; மற்றொன்று மழை வெள்ள பாதிப்பு. இதில், 2021, நவம்பர் மாதம் சென்னையில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. திமுக அரசின் துரித செயல்பாட்டாலும், முதலமைச்சர் ஸ்டாலினின் சுறாவளி ஆய்வும் பாதிப்புகளை சீர்படுத்தியது.
தொடர்ந்து, 2022, ஜீன் மாதம் ஏற்பட்ட திடீர் மழை வெள்ள பாதிப்பிலும், அவர் சுணக்கம் காட்டாமல் ஒரு நாளில் 81 கி.மீ., பயணம் மேற்கொண்டு, ஆய்வுகளை செய்து மக்களுடன் களத்தில் இருந்தார். சென்னை மட்டுமின்றி கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்கு உள்ளான கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.
துபாய் சுற்றுப்பயணம்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்தாண்டு மார்ச் 24ஆம் தேதி துபாய் சென்ற அவர், துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்துவைத்தார். மேலும், அங்கு 2 நாள்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதையடுத்து, துபாய்க்கு பின் அபுதாபிக்கு பயணம் செய் முதலமைச்சர், அங்கு உள்ள முக்கிய அரசு அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன. அபுதாபியில்,’நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வு, தமிழ்ச்சங்க நிகழ்வு உள்ளிட்டவற்றிலும் பங்கேற்றிருந்தார். இது முதலமைச்சர் ஸ்டாலினின் மிக முக்கிய சுற்றுப்பயணமாகும்.
நலத்திட்ட பயணங்கள்
சுமார் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டதன் மூலம், மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பயனடைந்துள்ளார்கள். அதாவது ஒரு கோடிப் பேருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக இத்தனை பேர் பயனடைந்துள்ளனர்.
மொத்தமுள்ள மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் நலத்திட்ட விழாக்கள் நடந்துள்ளன. முடிவுற்ற மொத்தப் பணிகள் 7 ஆயிரத்து 430 ஆகும். இதன் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்பட்ட மொத்தப் பணிகள் 13 ஆயிரத்து 428; இதன் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஆகும். இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கொங்கு மணடலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நான்கு நாள் சுற்றுப்பயணம், மதுரை பாப்பாபட்டி கிராமசபையில் பங்கேற்க சென்ற சுற்றுப்பயணம், இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்க விழுப்புரம் சுற்றுப்பயணம், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்க கிருஷ்ணகிரி சுற்றுப்பயணம் உள்ளிட்டவை முக்கியமானவைகளாக கருதப்படுகிறது.
முதலமைச்சர் கள ஆய்வு
மு.க.ஸ்டாலின், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகிறார். இந்த திட்டத்தின்கீழ் பிப். 1, 2ஆம் தேதிகளில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அடுத்து, பிப். 15, 16ஆம் தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொண்டார். மார்ச் 5, 6ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்ட முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை முதமைச்சர் ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
பாரதிதாசனின் வரியாக வாழும் முதலமைச்சர்
நாள்தோறும் உழைப்பதாகச் சொல்வார்கள் – இல்லை இல்லை நொடிக்கு நொடி உழைத்து வருகிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாரதிதாசனின் வரிகளை முதலமைச்சர் எப்போதும் மேற்கொள் காட்டுவார். ‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’ என்ற அந்த வரிகளுக்கு உதாரணமாக அவர் துரிதமாக, விவேகமுடன் கூடிய நுண்ணுணர்வுடனும் பயணித்து வருகிறார். இன்று அவர் தனது 70ஆவது அகவையை அடைந்திருக்கிறார். 70 வயதிலும் ஓர் இளைஞர் போன்று சுறுசுறுப்பாக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வரும் அவர், தொடர்ந்து பல்லாண்டுகள் இதேபோன்று இயங்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.