ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. 10 சுற்றுகள் முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,527 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 28,572 வாக்குகள் பெற்றுள்ளார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தற்போது 10 சுற்றுகள் முடிவிலே வாக்கு வித்தியாசம் சுமார் 50,000 என்ற அளவில் உள்ளது. அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை தக்கவைத்தாலும் இது மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக நிர்வாகி ராம சீனிவாசனை தொடர்பு கொண்டு சமயம் தமிழ் சார்பாக பேசினோம்.
அப்போது அவர், “எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. முடிவு இப்படித்தான் வரும் என்பதை ஆரம்ப கட்டத்திலே உணர்ந்துவிட்டோம். தமிழ்நாடு வெட்கித் தலைகுனியும் அளவுக்கு மோசமான வெற்றியை திமுக கூட்டணி பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் வாக்குகளை விற்பவர்கள் என்று வெளிநாட்டினர் கருதும் சூழ்நிலையை திமுக உருவாக்கியுள்ளது.
ஒரு இடைத்தேர்தலுக்காக ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கி பணத்தின் மூலம் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவார்கள் என்று கூற முடியாது. 2006-2011 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இடைத்தேர்தல்கள் அனைத்திலும் திமுக வெற்றி பெற்றது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
அதேபோல் விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெறும். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
மேலும் அவர், “மக்களவைத் தேர்தலில் அமமுகவையும் கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிப்போம். அமமுக மட்டுமல்ல திமுகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒரே அணிக்கு கொண்டு வந்து திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் தேர்தலை சந்திப்போம்” என்று கூறினார்.