சென்னை: “ஈரோடு தொகுதி மக்கள் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடித் தந்ததோடு அஇஅதிமுக – பாஜக சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி – இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அஇஅதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் அவதூறுகளையும், பொய்களையும் அள்ளி வீசின. இத்தேர்தல் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்றனர். அத்துடன் தேர்தல் தீர்ப்பு திமுக ஆட்சி மீதான தமிழக மக்களின் மதிப்பீடாக அமையும் என்றனர்.
பாஜக தலைவர்கள் ஜனநாயக வரம்புகள் மீறி பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். பதற்ற சூழலை உருவாக்கத் துடித்தனர். தேர்தலை ரத்து செய்ய கோரினர். மறுபுறத்தில் திமுக கூட்டணி, ஜனநாயக வடிவில் தேர்தல் வாக்குறுதிகளை முன்மொழிந்து தமிழக அரசின் திட்டங்களை வெளிப்படுத்தியது, அரசின் சாதனைகளை விளக்கியது. அனைத்தையும் சீர்தூக்கிய ஈரோடு தொகுதி மக்கள் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடித் தந்ததோடு அஇஅதிமுக – பாஜக சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அஇஅதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் கூறியது போல் இத்தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலின் முன் அறிவிப்பாகும் என்பதோடு தமிழக அரசின் மீதான நல்லதோர் மதிப்பீடாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. வாக்களித்த தொகுதி மக்களுக்கும், இடைவிடாமல் தேர்தல் பிரச்சாரங்களில் அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தோழர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.