வேலூர்: இந்திய வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய மாநகரமாக வேலூர் மாநகரம் உள்ளது. அதோடு வளர்ந்து வரும் மாநகரில் முக்கியமானதாவும் உள்ளது. சென்னை, பெங்களூரு, திருப்பதி என்று 3 மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கும் நகரமாக உள்ளது. வேலூர் நகராட்சியை மாநகராட்சியாக கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 60 வார்டுகளுடன் முதல் மாநகராட்சி தேர்தலை 2011ம் ஆண்டு சந்தித்தது. காட்பாடி, வேலூர், அணைக்கட்டு என்று 3 சட்டப்பேரவை தொகுதிகளின் பகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மாநகராட்சியின் மக்கள் தொகை மட்டும் சுமார் 8 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. வேலூர் மாவட்டத்தின் பாதி மக்கள் தொகை வேலூர் மாநகராட்சியில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அந்தஸ்தை பெற்றும் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இன்னமும் நகராட்சி போலவே இயங்கி வருகிறது. மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும் சாலை விரிவாக்கம் இல்லாததால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சி சேர்க்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் மேம்பாலம் இல்லாத மாநகராட்சியாகவும், சாலை உட்கட்டமைப்பு இல்லாத நிலையாகவே இன்னும் இருந்து வருகிறது. வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், வேலூர் கோட்டை, புரம் தங்கக் கோவில் ஆகியவற்றை பார்வையிடவும் வெளி மாவட்ட, மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் வேலூருக்கு வந்து செல்கின்றனர். அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வேலூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த வேலூர் மாவட்டத்தில் கணக்கில் உள்ளது மட்டும் சுமார் 8 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. அதில் மாநகரில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஆட்டோக்களும், 2 ஆயிரம் கார்களும் இயங்குகின்றன.
அதிக எண்ணிக்கையில் கார், ஆட்டோ டிரைவர்களைக் கொண்ட நகரங்களில் வேலூர் முக்கிய இடம்பிடித்துள்ளது. வேலூர் மாநகரில் உள்ள சிஎம்சி, விஐடி, பொற்கோயில் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகம் செல்வதால் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. மாநகரில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மேலும் வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வேலூர் மாநகரத்திற்கு வரும்போது ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். அப்போது அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் ஆட்ேடா டிரைவர்களுக்கும் வெளிமாநிலம், வெளிநாட்டு பயணிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிகிறது. ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தாமல் உள்ளதால் தங்களின் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு காட்பாடி ரயில்நிலையம், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், பாகாயம் ஆகிய இடங்களில் கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு பகுதியில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அதிகளவில் சிஎம்சி, புரம், விஐடிக்கு வருவதால் அங்கிருந்து ப்ரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது. அதற்காக ரயில்நிலைய வளாகத்தில் பூத் அமைக்கப்பட்டது. கட்டண விவரங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்பதால், இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இருப்பினும் சில ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தொடங்கிய ஒரிரு மாதங்களில் முடிவுக்கு வந்தது.இதனால் ஆட்டோக்கள் தங்களின் இஷ்டத்திற்கு நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றுவது, இறக்குவது என்று தொடர்ந்து வருகிறது. ஒரு ஒழுங்கு முறை இல்லாமல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதும், பாதுகாப்புக்கும் கேள்விக்குறியாக உள்ளது. வெளியூர்களில் இருந்து வந்து ஆட்டோக்கள் வேலூர் மாநகரத்தில் இயக்கப்படுவதால் போலீசார் அதை கட்டுப்படுத்தாமல் உள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பொது மக்களிடம் கட்டண கொள்ளை தடுக்கவும், வேலூர் மாநகரத்தில் முக்கிய இடங்களான காட்பாடி ரயில்நிலையம், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், பாகாயம் ஆகிய இடங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.