ஈரோடு கிழக்கில் என்ன நடந்தது? அதிமுகவிற்கு ஏன் இந்த நிலை? வைகைச் செல்வன் பேட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு சுற்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிற்பகல் நிலவரப்படி, காங்கிரஸ் 53,735 வாக்குகளும், அதிமுக 20,041 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்மூலம் அதிமுக தோல்வி முகத்தை நோக்கி செல்வதை தெரியவருகிறது. இதுதொடர்பாக ”சமயம் தமிழுக்கு” பிரத்யேகமாக பேசிய
எடப்பாடி பழனிசாமி
ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை அதிமுக ஏற்கனவே முன்வைத்தது.

அதிமுக போட்டி

அந்த குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகி இருக்கிறது. ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுக களத்தில் நின்றது. ஆனால் பண நாயகம் வென்றிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிற முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவருடைய அமைச்சரவை சகாக்களும் ஒருமாத காலம் ஈரோடு கிழக்கில் முகாமிட்டனர்.

திமுகவின் புதிய கலாச்சாரம்

சென்னை தலைமை செயலகத்தில் எந்தவித வேலையும் நடைபெறவில்லை. அதேசமயம் ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை அடைத்து வைத்து காலை முதல் இரவு வரை அவர்களை கண்காணித்தனர். கூடவே மூளைச்சலவை செய்து உணவு வழங்கி பணத்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்புகிற புதிய கலாச்சாரத்தை
திமுக
அறிமுகப்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு கருப்பு நாள்

திருமங்கலம் இடைத்தேர்தல் எப்படி கருப்பு நாள் என்று தேர்தல் வரலாற்றில் கருதப்பட்டதோ, அதேபோல் ஈரோடு கிழக்கில் மற்றொரு கருப்பு நாளை திமுக அரங்கேற்றியிருக்கிறது. இந்த தேர்தலுக்கு பின்னர் அதிமுக தலைமையில் எந்தவித மாற்றமும் நிச்சயம் வராது. அரசியல் கட்சிகளுக்கு வெற்றியும், தோல்வியும் இயல்பான ஒன்று தான். நாங்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர் தாக்குதலை தொடுப்போம்.

திமுக தோல்வி

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்த போது திமுக தோல்வியை தழுவியது. எனவே மீண்டு வருவோம் என்று கூறினார். இடைத்தேர்தல் முடிவுகள் வரும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். தற்போது அதிமுக தோல்வி முகமாக இருப்பதால் இதன் பாதிப்பு அடுத்த தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

மக்களவை தேர்தல் களம்

அதற்கு, தற்போது வெற்றி பெற்றிருப்பது பண நாயகம் மட்டுமே. எனவே வரும் மக்களவை தேர்தலில் இதேபோன்ற சூழல் இருக்கும் எனச் சொல்ல முடியாது. நிச்சயம் மாற்றம் ஏற்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் ஒரு இளைப்பாறுதல் தேவை. அதன்பிறகு பொதுக்குழு இருக்கிறது. பொதுச் செயலாளர் தேர்தல் உள்ளது.

கூட்டணி வியூகம்

இவைகள் அனைத்தும் முடிந்த பிறகு எங்கள் கட்சியை பலப்படுத்தி மீண்டும் வேகப்படுத்துவோம். அதன்பிறகு மக்களவை தேர்தலுக்கு புதிய வியூகத்தை வகுப்போம். கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. கட்சியின் பொதுச் செயலாளர் எடுக்கிற முடிவுகளை பொறுத்து தான் அடுத்தடுத்த விஷயங்கள் அரங்கேறும் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.