ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முடிவை பாஜக ஏற்கிறது: அண்ணாமலை கருத்து

விழுப்புரம்: “ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, எப்போதுமே தேர்தலின் தீர்ப்பு வந்த பிறகு, மக்கள் கொடுத்திருக்கக் கூடிய செய்தியை தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அரசியல் ஜனநாயகத்தில் முக்கியமானது. அப்படித்தான் பாஜக எல்லா தேர்தல்களையும் பார்க்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி சரித்திர வெற்றி. நாகாலாந்தில் பல்வேறு பிரச்சினைகள் நிறைந்த மாநிலம். பாஜக அந்தப் பிரச்சினைகளில் எல்லாம் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக பாஜக கூட்டணிக்கு அங்கும் வெற்றி கிடைத்துள்ளது. மேகாலயாவைப் பொறுத்தவரை, பாஜக தனித்துப் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜகவின் கூட்டணி இல்லாமல் அங்கு ஆட்சியமைக்க முடியாது என்ற கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த வெற்றிக்கு ஒரே காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

1947-ம் ஆண்டு தொடங்கி 2014 வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு எத்தனைமுறை சென்றார்களோ, பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 52 முறை பயணித்துள்ளார். மத்திய அரசு செய்து கொடுத்துள்ள நலத்திட்ட உதவிகளின் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலும் பாஜக அல்லது பாஜக சார்ந்திருக்கிற கட்சிகளின் ஆட்சியென்று வந்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, எப்போதுமே தேர்தலின் தீர்ப்பு வந்தபிறகு, மக்கள் கொடுத்திருக்கக்கூடிய செய்தியை தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அரசியல் ஜனநாயகத்தில் முக்கியமானது. அப்படித்தான் பாஜக எல்லா தேர்தல்களையும் பார்க்கிறது. ஏனென்றால் மக்கள் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது நிறைய விஷயங்களை முன்வைத்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் சில விஷயங்களை முன்வைத்திருக்கிறோம். அங்கு எப்படி பணம் விளையாடியது என்பதையெல்லாம் பார்த்தோம். எனவே, மக்களின் முடிவை பாஜக ஏற்றுக்கொள்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு 13 மாதங்கள் இருக்கிறது. இடைத்தேர்தல் ஆரம்பித்தபோது இந்த வார்த்தையை சொன்னேன், 2024 தேர்தல் எங்களுக்கான தேர்தல். பாஜகவின் தலைவர்கள், தொண்டர்கள் பதில் சொல்வதற்கு காத்திருக்கிறோம்.

இந்த இடைத்தேர்தல் என்பது பாஜகவுக்கான இடைத்தேர்தல் இல்லை. அதனால், நாங்கள் போட்டியிடவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தோம். கூட்டணி தர்மத்தின்படி எங்கள் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருமே வேலை செய்து கொடுத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.