ஈவிகேஎஸ் வெற்றியால் செல்வப்பெருந்தகை பதவி பறிக்கப்படுமா? காங்கிரஸ் முடிவு என்ன?

ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு சுற்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய நிலவரப்படி
காங்கிரஸ்
வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 35,532 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 6,357 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 950 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் வெற்றி உறுதி

இன்னும் சில சுற்றுகள் எண்ணப்படவுள்ள நிலையில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகி விட்டது. ஏனெனில் 58 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார். இதை அதிமுகவால் முறியடிப்பது இயலாத காரியம். இந்த வெற்றியை திமுக கூட்டணி கட்சியினர் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை

ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் வென்றுள்ளதால் சட்டமன்றத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதே 18ஆகவே நீடிக்கிறது. தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றியால் செல்வப்பெருந்தகை பதவிக்கு ஆபத்து வருமா? என்ற கேள்வி எழுகிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

செல்வப்பெருந்தகை பதவி

ஏனெனில் ஈவிகேஎஸ் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் மிகவும் மூத்தவர். முன்னதாக மத்திய இணை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகித்தவர். எனவே மேற்குறிப்பிட்ட பதவியை மூத்த தலைவருக்கு அளிப்பதே சரியாக இருக்கும் என கட்சி தலைமை நினைக்கலாம்.

ஷபீர் அகமது பதில்

இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவிடம் ’சமயம் தமிழ்’ சார்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு, ”ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியால் செல்வப்பெருந்தகையின் சட்டமன்ற குழுத் தலைவர் பதவி மாற்றப்படுவதற்கான கட்டாயம் ஏதும் இல்லை. மேலும் காங்கிரஸ் தலைமை உடன் செல்வப்பெருந்தகை இணக்கமான போக்கை தான் கடைபிடித்து வருகிறார்.

ஈவிகேஎஸ் விரும்ப மாட்டார்

இதனால் உடனடி மாற்றங்களுக்கு வாய்ப்புகள் இல்லை. குறிப்பாக உடல்நிலையை கருத்தில் கொண்டு ஈவிகேஎஸ் இளங்கோவனே விரும்ப மாட்டார். ஏனெனில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாகவே இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதால் தான் போட்டியிட்டார். இதுபோன்ற காரணங்களால் செல்வப்பெருந்தகை பதவிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் சலசலப்பு

இதுதவிர செல்வப்பெருந்தகை தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர். இப்படிப்பட்ட சூழலில் இவரை நீக்கி விட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனை அமர வைத்தால் சமூக ரீதியிலான பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புண்டு. எனவே தற்போதைய சூழலில் செல்வப்பெருந்தகையின் சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் யாரும் கைவைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.