காசியை தொடர்ந்து குஜராத்திலும் தமிழ் சங்கமம்: 10 நாட்கள் நடத்த திட்டம்| PM Narendra Modi’s home state Gujarat set to host Saurashtra-Tamil Sangamam

புதுடில்லி: சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், வரும் ஏப்ரலில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ‘சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விடுதலையின் 75ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ‘விடுதலையின் அமுதப் பெருவிழா’-வின் ஓர் அங்கமாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வை மத்திய அரசு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்தாண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை ஒரு மாதமாக நடத்தியது. இதனை பிரதமர் மோடி நவ.,19ல் துவக்கி வைத்தார். இதற்கு பெருமளவு வரவேற்பு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் 10 நாள் நிகழ்ச்சியாக ‘சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3000 முதல் 5000 பேர் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியாவின் மிகப் பழமையான ஜோதிர்லிங்கமான சோமநாத் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீவிர சிவ வழிபாட்டாளர்களாக வருகை தருகின்றனர்.

இதனால் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வார்கள். இன்னும் திட்டமிடல் நிலையில் உள்ள இந்த திட்டம் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும்.

இது கலாச்சார நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல், கலை, உணவு, கைவினைஞர்கள், கல்வி, இலக்கியம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் ஒரு தொடர்பை உருவாக்கும்’ என்றனர்.

latest tamil news

தமிழகம் – குஜராத் தொடர்பு

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, 1024ல் கஜினி முகமது படையெடுப்பின்போது, இங்குள்ள மக்கள் தென்னிந்தியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். அடிப்படையில் நெசவாளர்களான இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் மதுரையில் தங்கி 1623 முதல் 1669 வரை மதுரை மன்னரான திருமலை நாயக்கரின் கீழ் அரச குடும்பங்களுக்கு பட்டு அங்கிகளை நெய்தனர்.

அவர்கள் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம் போன்ற இடங்களில் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக குடிபெயர்ந்தனர். குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையேயான பெரிய தொடர்புகளில் இதுவும் ஒன்றாகும்.

கர்நாடக இசையமைப்பாளர் வெங்கடரமண பாகவதர், மதுரை காந்தி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் என்எம்ஆர் சுப்பராமன் மற்றும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் தமிழகத்தின் சவுராஷ்டிராவைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பிரபலங்கள். 12 லட்சம் சவுராஷ்டிர மக்கள் தமிழகத்தில் குடியேறி உள்ளனர்.

அதில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மதுரையில் மட்டுமே வசிக்கின்றனர். மீதமுள்ளவர்கள் சென்னை, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.