“இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறது” என் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கொரோனா வைரஸ் பரவலை இப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று தொடங்கிய மூன்று ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. தற்போது ஒமிக்ரானிலிருந்து உருமாறிய XBB.1.5 வைரஸால் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவிட் குறித்து சௌமியா சுவாமிநாதன் பேசியிருக்கிறார். “கோவிடை பொறுத்தவரை இந்தியா சற்று பாதுகாப்பான நிலையில்தான் உள்ளது. இதனால் அதிக பயமடையத் தேவையில்லை. அதிக எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் உருமாறும் புதிய வைரஸ், தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றிருந்தாலும் தொற்றுவதற்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. எனவே, உருமாறும் வைரஸ் குறித்த தொடர் கண்காணிப்பு அவசியம்.
தற்போது ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த உருமாறிய வைரஸ் பரவி வருகிறது. இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு புதிய தொற்று பரவலாம். எதிர்காலத்தில் வர இருக்கும் தொற்றுகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். மேலும் வரும் ஆண்டுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டுமா என்பது குறித்தும் முடிவு செய்ய வேண்டும்.
கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4-5% அதிகரித்துள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகவும் கோவிட் தொற்று அமைந்துள்ளது. கொரோனா சூழலில் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் குறைந்தளவே செலுத்தப்பட்டன. இதனால் தட்டம்மை உள்ளிட்ட நோய்கள் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். பெருந்தொற்று காரணமாக மூன்று ஆண்டுகளாக அதிகம் வெளியே செல்லாமல் இருந்து, தற்போது புழக்கம் அதிகரித்து வருவதால் கிருமிகளும் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது. சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருப்பவர்கள் மாஸ்க் அணிவது நல்லது. இதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மாஸ்க் அணிவதைப் பழக்கமாக்கிக் கொள்வதும் நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உலக மக்கள்தொகையில் 90% பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இருப்பினும் உருமாறிய புதிய வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது. பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சர்வதேச அளவில் கோவிட் பெருந்தொற்று இன்னும் பொது சுகாதார அவசரமாகவே நீடிக்கிறது என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.