சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஓர் உருளையின் விலை ரூ.1118.50 ஆக உயர்ந்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத விலை. இது அவர்களின் மாதச் செலவுகளை கடுமையாக பாதிக்கும்.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.710 ஆக இருந்தது. கடந்த 20 மாதங்களில் ரூ.408, அதாவது 58% உயர்ந்திருக்கிறது. மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

சமையல் எரிவாயு விலை கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உலகச் சந்தையில் எரிவாயு விலை சரிந்திருக்கிறது. இந்தியாவிலும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலை குறைக்கப்பட்டது. வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலையை குறைப்பதற்கு பதிலாக உயர்த்துவது நியாயமா?

சமையல் எரிவாயு விலை ரூ.1000-க்கும் மேல் இருக்கக் கூடாது. எனவே, சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.