சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள எரிஎரிபொருள் , விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இன்று (02) முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக ,டோகன்கள் (குறி அட்டைகள்) வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, சீன அரசாங்கத்தினால், 6.98 மில்லியன் லீட்டர் டீசல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த எரிபொருளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் அதிகாரிகளுக்கும், விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திற்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த எரிபொருட்களை பகிர்ந்தளிப்பது குறித்து நேற்று (01) கமத்தொழில் அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதற்கமைய, நாட்டின் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் இலகுவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விவசாய அபிவிருத்தித் திணைக்களம் குறித்த டோகன்களை நேற்று (01) இரவு வழங்கியுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும், குறித்த எரிபொருளை பெயர் குறிப்பிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று விவசாய அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.
டோகன் வழங்கப்படாத, கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் இன்று (02) டோகன்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் எச்.எம்.ஏ.எல். அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, அரை ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் வரையான நிலப்பரப்புக்களில் நெற் பயிர்ச்செய்கையை மேற்கெண்ட விவசாயிகளுக்கே இந்த எரிபொருள் சலுகை உரித்தாகும். ஒரு ஹெக்டயருக்கு 15 லீட்டர் டீசல் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.