திரிபுரா தேர்தல் 2023;காங்கிரஸ் கூட்டணியை ஓடவிட்ட பழங்குடியினர் கட்சி.!

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 31 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றும் எனும் நிலையில், தற்போது பாஜக 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஏனெனில் முக்கிய எதிர்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் என அந்த கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோல் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோல் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக் கட்சி ஆரம்பித்த பிரத்யோத் பிக்ரம் மாணிக்யா தேப்பர்மாவின் திப்ரா மோதா கட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதன் முதலாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட நிலையில், 13 இடங்களில் முன்னனியில் இருப்பது சாதாரண விஷயமல்ல என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

திப்ரா மோதாவின் அடிப்படை கோரிக்கை என்பது ‘கிரேட்டர் திப்ராலாந்து’ என்ற பெயரில் தனி நாடு வேண்டும் என்பது தான். பட்டியலின பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 20 சட்டமன்ற தொகுதிகள் உட்பட 60 இடங்களில் 42 இடங்களில் திப்ரா மோதா போட்டியிட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் 20 தொகுதிகளில் திப்ரா மோதா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னதாக, திப்ரா மோதாவின் பேரணிகள் பெரும் கூட்டத்தை ஈர்த்தது, இது இந்த தேர்தலில் சாத்தியமான காரணியாக பார்க்கப்பட்டது. அதனால் ஆரம்பத்திலேயே பாஜக திப்ரா மோதாவை அணுகியது, ஆனால் பழங்குடியினர் கட்சி தனிநாடு கோரிக்கையில் ஒட்டிக்கொண்டதால் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தோல்வியடைந்தன. அதை தொடர்ந்து அக்கட்சி தனித்து களம் கண்டது குறிப்பிடதக்கது.

தற்போதைய நிலவரப்படி, பாஜக தனது கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டியுடன் பெரும்பான்மையுடன் இருப்பதால், அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்த ஆதரவும் தேவைப்படாது. எவ்வாறாயினும், IPFT போட்டியிட்ட இடங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் 2018 வெற்றி எண்ணிக்கையான எட்டிலிருந்து, இப்போது ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னணியில் உள்ளது, இது திப்ரா மோதாவுக்கு ஆதரவை மாற்றுவதைக் குறிக்கிறது.

எவ்வாறாயினும், ‘கிரேட்டர் திப்ராலாந்து’ தவிர, திப்ரா மோதாவின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க தயாராக இருப்பதாக மாநில பாஜக தனது பிரதிநிதிகளை தூதுவிட்டுள்ளது.

திப்ரா மோதா உருவான கதை

முன்னாள் மாநில காங்கிரஸின் தலைவரான பிரத்யோத் பிக்ரம் மாணிக்யா தெப்பர்மா, ஊழல் தலைவர்களுக்கு இடமளிக்க காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டி கட்சியில் இருந்து விலகினார். ஆனால் இதற்கு பின்னால் பாஜகவின் திரைமறைவு அரசியல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தேர்தலில் வெற்றி பெருவதையே நோக்கமாக கொண்டு தீவிரமாக செயல்படும் பாஜக, திரிபுரா மக்களிடையே நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்ற மாநில காங்கிரஸ் தலைவரை அக்கட்சியில் இருந்து பிரித்து தனிக்கட்சி ஆரம்பிக்க தூண்டியதாக கூறப்படுகிறது. உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் சொந்த கட்சியில் பிரிந்து தனியாக களம் கண்டனர். இதற்கு பாஜகவின் செயல்பாடுகளே காரணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

தென்னிந்தியாவில் கிளை பரப்பும் விசிக; அகில இந்திய அரசியலை நோக்கி திருமாவளவன்!

அந்தவகையில் திரிபுரா காங்கிரஸ் தலைவர் தெப்பர்மா கடந்த 2019ம் ஆண்டு, மாநிலத்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு சமூக அமைப்பைத் தொடங்கினார். 2021 இல், இந்த அமைப்பு திரிபுராவின் பழங்குடியினப் பகுதிகளின் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த வெற்றி சட்டமன்றத் தேர்தல் களத்தில் அதன் அறிமுகத்திற்கான களத்தை அமைத்தது. தற்போது மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இணையாக முதல் தேர்தலிலேயே முன்னனியில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.