வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தேர்தல் என்ற ஒன்று வருகின்றபோது, அரசியல் தளம் சூடுபிடிக்கும், அதில் களமாடிட துடிப்போரிடத்தில் வெற்றி என்னும் ஒற்றைச் சொல் மட்டுமே பிரதானமாக முன்னியங்கும்.
இந்தப் பிரதானத்தை அடைந்து கொள்வதற்காக ஒரு அரசியலாளன் ஜனங்களுக்கு பலவித நிலைகளில் சன்மானம் வழங்க முன்வருகிறான், இதுபோன்று சன்மானம் வழங்குவதால் வரக்கூடிய வெகுமானமான வெற்றியை பின்னாளில் அறுவடை செய்து கொள்ளலாம் என்பதே அவனது திண்ணமாக அமைந்துள்ளது.
இதுவே தற்போது பின் நவீனத்துவ அரசியலின் வடிவமாக கட்டமைக்கப்பட்டுவிட்டது.
இந்த கட்டுமானத்தின் அடிப்படையானது வாக்காளனின் அரசியல் அறிவின் விளிம்புகளில் இருந்து பார்க்கப்படுகிறதா? என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனென்றால் ஒரு அரசியலாளன் இதற்காக வாக்காளனின் அரசியல் தொடர்பான எண்ண ஓட்டத்தினுடைய விளிம்பு வரை பயணிக்க வேண்டிய எவ்வித அவசியமும் இங்கில்லை எனலாம்.
பொதுவாக தேர்தல்களில் வாக்காளனின் மைய ஓட்டமானது எதன் அடிப்படையில் இயங்குகிறது என்ற உளவியல் சித்து தெரிந்திருந்தாலே போதுமானது,
இந்த உளவியல் சித்து விளையாட்டில் கைதேர்ந்தவர்களாக தற்போதைய நவீன வடிவ அரசியல்வாதிகள் பரிணாமம் அடைந்துள்ளனர்.
எவற்றையெல்லாம் தான் வாக்களிக்கப் போகும் வேட்பாளரிடத்தில் கேட்டுப் பெற வேண்டும் என்ற திண்ணம் ஒருபோதும் பெரும்பான்மை மக்கள் திரளிடையே இருப்பதில்லை.
அதற்கான கேள்வி ஞானம் இல்லாமைதான் ஆகப்பெரிய ஒரு குறைபாடாக உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளை தம்மை ஆள்வதற்காக கொடுக்கும் ஒற்றைவிரல் மைத்துளிகளுக்கு பல நாட்கள் முன்னதாகவே ஒரு வாக்காளன் தனது சுய சார்புகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை மட்டுமே முன்னிறுத்தாமல் தாம் சார்ந்திருக்கும் சமூகம் மற்றும் சூழப்பட்டிருக்கும் சமூக சூழல் மேம்பாடு போன்றவற்றை பிரதானப்படுத்தி அவனது வாக்கறிவு வீற்றிருக்குமானால் அதுவே சிறந்த ஆட்சியாளனை தமக்குத் தாமே தேர்ந்தெடுக்க போதுமான பட்டறிவாக அமையும்.
அதேபோன்று ஒரு வாக்காளனின் குறைந்தபட்ச வாக்களிப்புத் திறன் குறித்த அறிவு என்பது அவன் வாக்களிக்கும் தினத்தில் வாக்களிக்கப் போகும் மணித்துளிகளுக்குள் தாம் வாக்களிக்கப் போவோரால் உள்வாங்கிய கடந்த கால சமூகப் பயனீடுகளில் எத்தனை விழுக்காட்டினை தாம் இதுவரையில் அடைந்து இருக்கின்றோம் என்ற வினாவுக்கான விடையை தீர்மானிக்கின்றானா? என்பது சந்தேகமே!
இது குறித்து நாம் வினாக்களுக்குள்ளேயே! நிறைய பயணப்பட வேண்டியுள்ளது.
சரி! இறுதியாக ஒற்றைச் சமூகம், தனிமனித சுயநலன், வாக்கிற்கான கையூட்டு போன்ற சாராம்சங்களுக்கு அப்பால் அடிப்படையில் தான் சார்ந்திருக்கும் பன்முகம் கொண்ட இந்த முழு சமூகமும் அடையப் போகும் பயன்பாட்டின் அடிப்படையில் நம் வாக்குகள் அமைய வேண்டும் என தீர்மானித்து வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாக ஒவ்வொரு வாக்காளரும் கொண்டிருந்தால் மட்டுமே!
நாம் நமது எதிர்காலம் குறித்த சிந்தனை தெளிவை அடைந்து இருக்கின்றோம் என்பதை இனி வரும் அரசியல் உலகுக்கு எடுத்துக் காட்டும்.
அவ்வாறில்லை எனில் அரசியல் சந்தைக்குள் மனித மந்தையராக நடத்திச் செல்லப்படும் அவலங்கள் தொன்று தொட்டு நம்மைத் தொடரும்.
எண்ணமும் எழுத்தும்
பாகை இறையடியான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.