நாடு முழுவதும் ஸ்டாலின் பயணம்: வலியுறுத்தும் திருமாவளவன் – பாஜகவுக்கு எதிராக செம பிளான்!

அகில இந்திய அளவில் பிஜேபிக்கு எதிரணி தான் அதிகம் ஆனால் அவற்றை ஒன்றிணைப்பதில் தான் தேக்கம். அகில இந்திய அளவில் பிஜேபிக்கு எதிராக உள்ள அணிகளை ஒன்றிணைக்கும் பணியில் தமிழக முதலமைச்சர் ஈடுபட வேண்டும் என்று
திருமாவளவன்
திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.கவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார்.

மு.க
ஸ்டாலின்
நேற்று பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாக பேசி உள்ளார். விசிகவுடைய குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் முதலமைச்சரின் பேச்சு இருந்துள்ளது. அதனை வரவேற்கிறோம்.

பா.ஜ.கவை வீழ்த்த மு.க ஸ்டாலின் திடீரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்து விட்டார். காங்கிரஸுடன் இணைந்து பி.ஜே.பியை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான்.

அகில இந்திய அளவில் உள்ள பி.ஜே.பிக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதல்வர் ஈடுபட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணமாக நாடு முழுவதும் சென்று மாநில அரசியல் தலைவர்களை சந்திக்க வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, கே. சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே, மமதா பானர்ஜி போன்ற தலைவர்களையும் சந்திக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் பிஜேபிக்கு எதிரணி தான் அதிகம் ஆனால் அவற்றை ஒருங்கிணைப்பதில் தான் தேக்கம். அந்த தேக்கத்தை உடைப்பதற்கான ஒரு பிரகடனம் தான் முதல்வருடைய உரை. பி.ஜே.பி எதிர் அணியை ஒருங்கிணைக்க அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு முதல்வர் பயணிக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் மு.க ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். திமுக அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்” என்று கூறினார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேசிய அவர், “சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்ரேட்டுக்கானது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அக்கரை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. மத்திய அரசு சமையல் விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்” என்றார்.

மேலும் அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் 70 ஆயிரம் முதல் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.