சாத்தூர் அருகே பன்றி வளர்ப்பால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி தெரிவிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் அதிகளவில் நாட்டுப்பன்றி வளர்ப்பு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சாத்தூர் வைப்பாற்றங்கரை பகுதிகளான தேரடித்தெரு, படந்தால், அமீர்பாளையம், உப்போடை, வெங்கடாசலபுரம் ஆகியப்பகுதிகளில் நாட்டுப்பன்றி வளர்ப்பை காணலாம். திறந்த வெளிப்புறத்தில் சாதாரணமாக மேய்ச்சலுக்கு நிற்கும் பன்றிகள், ஆற்றுப்படுகை மற்றும் கழிவுநீர் தேங்கும் பகுதிகளில் கூட்டமாக காணப்படுகிறது. அவ்வாறு கழிவுநீர் தேங்கும் இடத்தில் பன்றிகள் செய்யும் அட்டகாசத்தால் எங்கள் பகுதியே துர்நாற்றத்துடன் கூடிய சுற்றுப்புறச்சூழலாக மாறியுள்ளது.
இதனால், கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு உருவாகிறது. மேலும் காய்ச்சல், வாந்திபேதி போன்ற தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் மக்கள், கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுகாதாரக்கேடு ஏற்படாதவண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை புகார் அளித்துள்ளோம்.
ஆனால் கடமைக்கு வந்து ஆய்வு செய்யும் அதிகாரிகள், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். அதிகாரிகள் எச்சரிக்கை செய்வதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளதால், நாட்டுப்பன்றி வளர்ப்பில் ஈடுபடுவோரும் எவ்வித பயமும் இன்றி மீண்டும் மீண்டும் அதேப்போன்று மெத்தனமாகவே செயல்படுகின்றனர்” என்றார்.
மற்றொருவரான ராஜ் பேசுகையில், “கடந்த ஒரு மாத காலமாக, மர்மமான முறையில் பன்றிகள் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே கட்டுப்பாடின்றி சுதந்திரமாக உலவும் பன்றிகளால் சுகாதாரகேடு ஏற்பட்டுவரும் சூழலில், தற்போது பன்றிகள் உயிரிழப்பதும் மனித சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. அதாவது, மர்மமான முறையில் திடீர் திடீரென இறக்கும் பன்றிகளை, முறையாக அடக்கம் செய்யாமல் தெருக்களிலும், வீதிகளிலும், ஓடைகளிலும் வெட்டவெளியில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இதனால், இரண்டொரு நாளில், உடல் உப்பிய நிலையில் வெடித்து பன்றியின் உடல் அழுகும் நிலைக்கு செல்கிறது. அப்போது காற்றில் வீசும் துர்நாற்றம் உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்துவதுடன் தொற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. மேலும், இறந்துகிடக்கும் பன்றியின் உடலை, நாய்கள் கடித்து இழுப்பதுடன் தெருக்களில் ஆங்காங்கே உடல் எச்சங்களை வீசி எரிவது, பொதுமக்கள் நடமாடவே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. பன்றிகள் இருந்தாலும் தொல்லை, இறந்தாலும் தொல்லை என்ற கதறல் மனநிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
இறந்துகிடக்கும் பன்றிகளை அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் அபாயமும், சுகாதாரக்கேடும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத் துறையினர் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கவனம் கொண்டு எங்கள் பகுதியை தொற்றுநோய் பரவலில் இருந்து பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
புகார்கள் தொடர்பாக மாவட்ட கால்நடைகள் பராமரிப்பு துறை அதிகாரிகளிடம் பேசுகையில், “குடியிருப்புகளுக்கு அருகே நாட்டுப்பன்றி வளர்ப்பில் ஈடுபடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம். ஒருவேளை நாட்டுப்பன்றி வளர்ப்பில் ஈடுபடுவர்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வசித்து வந்தால் அவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதையும் தெரிவித்திருக்கிறோம். சாத்தூர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியிலும் நாட்டுப்பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்களை சந்தித்து அவர்களுக்கு முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு, பயிற்சியுடன் மாற்றுத்தொழிலுக்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்துதருகிறோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்.
ஆனாலும் இதுதொடர்பாக எவ்வித இசைவையும் நாட்டுப்பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடந்த வாரங்களில் சாத்தூர் பகுதியில் நாட்டுப்பன்றிகள் இறந்துகிடந்ததையும், அதை நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் குழித்தோண்டி புதைத்ததையும் பற்றி நாளிதழ்களில் செய்தி வெளியானதை வைத்து அறிந்துகொண்டோம். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பேசும்போது கூட, நாட்டுப்பன்றி இறந்தது தொடர்பாக முறையான தகவல் பரிமாற்றம் செய்து, அவற்றை கூராய்வு செய்ததற்கு பின்னரே புதைக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம். குடியிருப்புகளுக்கு அருகில் நாட்டுப்பன்றி வளர்ப்பில் ஈடுபடுவது அபராதத்திற்கு வழிவகுக்கும் என்பதால் பன்றிகள் இறந்தாலும் கூட அதை உரிமைக்கோர உரிமையாளர்கள் யாரும் வருவதில்லை. இதனால் காவல்துறையின் மூலமாக நடவடிக்கை எடுப்பதற்கும் கூட சிரமமான சூழல் உள்ளது. ஆனால், நாட்டுப்பன்றி தொல்லை மற்றும் இறப்பு குறித்து நேரடியாக எந்த புகார்களும் எங்களுக்கு வரவில்லை. எனினும், இதுகுறித்து கவனம் செலுத்துகிறோம்” என்றனர்.