பாம்பு பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை- தமிழக ஆளுநர் வருத்தம்

தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று‌ அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார். மேலும் இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை பார்வையிட்டார்.

பாராட்டு விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் பேசுகையில், நான் இங்கு வந்தது உங்களை புரிந்து கொள்ளவும், உங்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக தான், இருவருக்கும் இந்திய ஜனாதிபதியினால் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் ஜனாதிபதி அவர்களின் கைகளால் பத்மஸ்ரீ விருதை பெற உள்ளனர். இந்த விருது மனித குலத்திற்காக பாடுபட்டதின் பிரதிபலிப்பதற்காக கொடுக்கப்பட்டது.‌

பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர்‌ பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இருளர் பழங்குடியின மக்களை பற்றி ஒருவரும் பேசவில்லை இது வருந்ததக்க விஷயம். 

இவர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை இந்தியா முழுவதும் காப்பாற்றி உள்ளனர் . இந்தியாவில் பல இடங்களில் பாம்பு கடி பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்களால் தான் அந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என பெரும்பாலானோருக்கு தெரியாது. அது வருந்தததக்கது. இதனை ஒரு தொழிலாக பாவித்து அதனை அங்கீகரிக்க வேண்டும், இருளர்கள் பாம்பு பிடித்து மனித உயிர்களை காப்பாற்றுகின்றனர். நாம் இவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்தால் போதாது. அவர்களுக்கான மரியாதையை பெற்று தர வேண்டும். 

இருளர்களுக்கு மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை வழங்க வேண்டும். சில தொழில்நுட்பங்களை பாம்பு பிடி தொழிலில் கொண்டு வர வேண்டும். மருத்துவர்கள் பல அங்கீகாரங்களுடன் வசதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இருளர்‌ இன மக்கள் வருமையில் வாடுகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களை இருளர் இன மக்களுக்காக செய்துள்ளன. அவர்களில் ஒரு சிலர் முன்னேறி இருந்தாலும், பலர் வருமையிலே வாடி வருகின்றனர். 

ஒரு இருளர் காலனி என்பது மற்ற இடங்களை போல தார் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற வேண்டும்.‌ நான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறேன். இங்குள்ள 300-இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசில் பணியில் இல்லை என தெரிகிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள், இருளர் குடி மக்களின் வளர்ச்சியே இந்த இந்திய தேசியம் வளர்ந்ததாக அர்த்தம். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேச சொல்லுங்கள் என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன். மாசி சடையன், வடிவேல் கோபால் அவர்களின் வீட்டிற்கு சென்றேன். என்னை மிகுந்த அன்போடு வரவேற்றனர் என பேசினார். 

பாராட்டு விழா நிகழ்ச்சியை முடிந்த பின்பு, சென்னேரி அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்று அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் மாணவர்கள் படித்து எதிர்காலத்தில் எந்த வேலைக்கு போக போகிறீர்கள் எனவும் கேட்டறிந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.