சென்னை: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 7 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களித்து மிகப் பெரிய, மகத்தான வெற்றியை தேடித் தந்துள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனவே, திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று மக்கள் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
திமுக ஆட்சியை எடைபோடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும் என கூறி வந்தேன். எனவே, இந்த ஆட்சியை எடை போட்டு மக்கள் மிகப் பெரிய வெற்றி தந்துள்ளனர். நாலாந்தர பேச்சாளர் போல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிவந்தார். அவருக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.