மூணாறு: மூணாறில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் முதிரைப்புழை ஆற்றில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் நீராதாரம் சீர்கெட்டு வருகிறது. எனவே, ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறின் மையப்பகுதியில் முதிரைப்புழை ஆறு செல்கிறது. நல்ல தண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டலை ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் தான் மூணாறு நகராகும். இந்த நகருக்கு, தினசரி ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் முதிரைப்புழை ஆற்றை சுத்தம் செய்ய மூணாறு ஊராட்சி பல லட்சம் ரூபாய் செலவு செய்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நகரில் உள்ள முதிரைப்புழை ஆற்றின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், டீ கடைகள், தங்கும் விடுதிகள் பெருகியதால் ஆற்றில் கட்டிட கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது முதிரைப்புழை ஆறு குப்பைகளால் நிரம்பி வழிகிறது. தற்போது வெயில் அதிகரித்ததோடு ஆற்றில் தண்ணீரின் வரத்து குறைந்துள்ளதால் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் ஆற்றின் கரையோரங்களில் தேங்கி நிற்கின்றன. இதனால் தண்ணீர் மாசடையும் நிலை உள்ளது. மேலும் நகரில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகள் ஆற்றில் கலப்பதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.