டெல்லி: இந்திய விமானப்படையையும், கடற்படையையும் வலுப்படுத்தும் விதமாக சுமார் ரூ.10,000 கோடியில் 70 பயிற்சி விமானங்கள், 3 பயிற்சி கப்பல்கள் வாங்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையாக உள்ள அடிப்படை பயிற்சி விமானங்களின் பற்றாக்குறையை நீக்க ஆலோசிக்கப்பட்டதோடு, அதனை நிவர்த்தி செய்ய இந்திய விமானப்படைக்கு ரூ.6 ஆயிரத்து 828 கோடியே 36 லட்சம் மதிப்பில் எச்டிடி 40 ரகத்தை சேர்ந்த 70 பயிற்சி விமானங்களை வாங்க ஒப்புதலும் கொடுக்கப்பட்டது.
இந்த தகவலை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த விமானங்களில் தற்போது 56% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை படிப்படியாக 60% அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட இந்திய தனியார் தொழிற்சாலைகளையே இந்த தயாரிப்பு பணிக்கு எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபடுத்த உள்ளது.
இதன் மூலம் நேரடியாக 1500 பேருக்கும், மறைமுகமாக 3000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதோடு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்படும் சூழலால், இந்திய ஆயுத படைகளின் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மேம்படுத்துதலை செய்யும் வசதியையும் இவ்விமானம் கொண்டிருக்கும். இந்த விமானங்கள் குறைந்த வேகத்திலும், பயிற்சிக்கு ஏற்ற வகையிலும் செயல்படக்கூடியவை. ஆதலால் இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க இது ஏதுவானதாக இருக்கும்” என அந்த பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இது தவிர, எல் அண்ட் டி நிறுவனம் மூலம் ரூ.3 ஆயிரத்து 108.09 கோடியில் 3 பயிற்சி கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்திற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் வடிவமைத்து கட்டபடவுள்ள நிலையில், இந்த கப்பல்களை அந்த நிறுவனம் வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடித்து வழங்க தொடங்கும் என பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி அளிக்க உதவ உள்ள இக்கப்பல்கள், கடற்படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆண், பெண்களுக்கு அடிப்படை பயிற்சியளிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.