லக்னோ: ரூ. 86 லட்சம் நில மோசடிப் புகார் – ஷாருக்கானின் மனைவி கௌரி கான் மீது FIR பதிவு

ஷாருக்கானின் மனைவி மற்றும் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் மீது மும்பையைச் சேர்ந்த ஒருவர் நில மோசடி புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் மனைவி கௌரி கான், ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதுடன், பிரபலங்களின் வீடுகளுக்கு இண்டீரியர் டிசைனிங்கும் செய்து கொடுத்து வருகிறார். பாலிவுட் நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர், ஜாக்குலின் பெர்ணான்டஸ், ஆலியா பட் ஆகியோரின் மும்பை வீடுகளுக்கு இண்டீரியர் டிசைனிங் செய்து கொடுத்தது கௌரி கான் தான். மேலும், சில நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் கௌரி கான் இருந்து வருகிறார்.

இந்நிலையில், துல்சியானி கட்டுமான குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அனில் துல்சியானி, இயக்குநர் மகேஷ் துல்சியானி மற்றும் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் மீது மும்பையைச் சேர்ந்த கிரித் ஜஸ்வந்த் ஷா என்ற தொழிலதிபர் புகார் கொடுத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு, லக்னோ சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் உள்ள துல்சியானி கோல்ஃப் வியூவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை 86 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும், கட்டுமானப் பணிகள் முடிந்து 2016-ம் ஆண்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டிய நிலையில், அந்த வீட்டை வேறொருவருக்கு கொடுத்ததுடன், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக கிரித் ஜஸ்வந்த் ஷா புகார் கொடுத்துள்ளார்.

image

துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான கௌரி கான், லக்னோ அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை விளம்பரத்தைப் பார்த்து தான் அந்த பிளாட்டை வாங்கியதாகவும், ஆனால் சொன்னப்படி தனக்கு பிளாட்டை தராமல் வேறொருவருக்கு விற்றுவிட்டது தெரிய வந்ததையடுத்து இந்தப் புகாரை அளித்துள்ளதாகவும் தொழிலதிபர் கிரித் ஜஸ்வந்த் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து லக்னோவில் இந்திய தண்டனைச் சட்டம் 409-ன் கீழ், கௌரி கான் மற்றும் துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.