அபிக்கு தேசிய விருது : சுசீந்திரன் நம்பிக்கை

சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தொடர் அயலி. அறிமுக இயக்குனர் முத்துகுமார் இயக்கி இருந்தார். 1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரத்தில் இருக்கும் வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் நிகழும் கதையே இந்த அயலி. இந்த கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழ்கின்றனர். அங்கிருக்கும் பழமை வாதிகள் மக்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறார்கள்.

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் படிக்கக் கூடாது, கோயிலுக்குள் செல்லக் கூடாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அதையும் மீறி 13 வயதுச் சிறுமி தமிழு (தமிழ்ச் செல்வி) படிக்க நினைக்கிறாள். தன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல், தன் சக தோழிகளின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற ஆசைப்படும் தமிழின் கனவு என்ன ஆனது என்பதே கதை. இந்த தொடர் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அயலி படக்குழுவினர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அயலி வெற்றியை கொண்டாடினார்கள். இநத நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாண்டிராஜ், சுசீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இதில் இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது: இது கொஞ்சம் தவறி இருந்தாலும் முழு ஆவணப் படமாக மாறி இருக்கும். அப்படி மாறி இருந்தால் எல்லாராலும் ரசிக்க முடியாது. ஆனால் இதை சுவாரஸ்யமாக அனைவரும் ரசிக்கும்படி ஒரு படைப்பாக உருவாக்கி வழங்கியிருந்தார் இயக்குநர். ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அடுத்தது பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

கதாநாயகியாக நடித்திருந்த நடிகை அபியை என் மகள் மாதிரி நினைத்துச் சொல்கிறேன். இந்த மேடையில்தான் நான் இதைச் சொல்ல வேண்டும். உனக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். மாநில விருதும் கிடைக்கும். அவ்வளவு அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். அபிக்கு 17 வயது தான் ஆகிறது. இந்தச் சின்ன வயதில் இவ்வளவு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.

ஆனால் அபி உன்னை யாரும் கமர்சியல் படங்களுக்குக் கதாநாயகியாக அழைக்க மாட்டார்கள். இதைவிட சிறப்பான ஒரு படம் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க வேண்டும். உனது பலமும் பலவீனமும் உனக்குத் தெரியும். நீயே அதை உடைத்து கடந்து வெளியே வர வேண்டும். அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொரு படமும் வெற்றியாகவே கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.