குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நிக்கி ஹேலி, அமெரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத வலுவான மற்றும் மிகவும் ஒழுக்கமான எதிரி சீனா என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி போரை நீட்டிக்க நினைக்கும் அமெரிக்காவின் எண்ணத்தை தகர்க்க, ரஷ்யாவிற்கு சீனா நிதியுதவி வழங்க உள்ளது. அதற்கு செக் வைக்கும் வகையில் சீனாவின் அண்டை நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இப்படி உக்ரைன் மற்றும் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் சீனாவிடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் சீனா வலுவான எதிரியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய அமெரிக்கரான நிக்கி ஹேலி, ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்தவர். இவர் கடந்த பிப்ரவரி 14 அன்று தனது ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார். அவர் தனது முன்னாள் முதலாளியும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் 2024 அதிபர் போட்டியில் இதுவரை இருந்த ஒரே பெண்மணி ஹேலி ஆவார்.
இந்தநிலையில் குடியரசுக் கட்சியின் உயர்மட்ட வருடாந்திர நிகழ்வில் அவர் உரையாற்றும் போது, ‘‘அமெரிக்கா அதை வெறுக்கும் நாடுகளுக்கு உதவி செய்யக்கூடாது. அமெரிக்க வான் பரப்பிற்குள் சீன உளவு பலூன்கள் நுழைந்தது தேசிய அவமானம். கம்யூனிஸ்ட் சீனா தான் நாம் எதிர்கொண்டுள்ள வலிமையான மற்றும் ஒழுக்கமான எதிரி.
சீனாவை நாம் பொறுப்பேற்க வைக்க வேண்டும். ஜோ பிடன் சீனாவை பார்த்து பயப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. சீன நிறுவனங்கள் இப்போது 380,000 ஏக்கருக்கும் அதிகமான அமெரிக்க மண்ணை வைத்துள்ளன, அவற்றில் சில நமது இராணுவ தளங்களுக்கு அடுத்ததாக உள்ளன. நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? நம் நாட்டில் ஒரு எதிரி நிலம் வாங்க அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்க சகாப்தம் கடந்துவிட்டதாக சீனா நினைக்கிறது. அமெரிக்காவின் அனைத்து எதிரிகளும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பதை நாம் அவர்களுக்கு நிருபிக்க வேண்டும்.
சோசலிசத்தை நோக்கிய அமெரிக்காவின் கீழ்நோக்கிய சுழலைத் தடுக்கவும், நாட்டை ஆக்கிரமித்துள்ள ஆளும் சோசலிஷ கட்சிகளை நாம் முடிவிற்கு கொண்டு வர வேண்டும். பலவீனமான நிலையில் அல்ல, வலிமையான மற்றும் பெருமிதம் கொண்ட அமெரிக்காவை புதுப்பிக்க நான் ஜனாதிபதியாக போட்டியிடுகிறேன்.
அதிபர் ஜோ பிடனும் ஜனநாயகக் கட்சியினரும் அமெரிக்கர்களுக்கு அடக்குமுறை, வறுமை மற்றும் சட்டமின்மையை வழங்குகிறார்கள். இதை முறியடிப்பதற்காக தான் வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தில் இறங்கியிருக்கிறேன். குடியரசு கட்சியினரே நீங்கள் தோற்று சோர்வாக இருந்தால், புதிய தலைமுறை மீது உங்கள் நம்பிக்கையை வையுங்கள். நீங்கள் வெற்றிபெற விரும்பினால் – ஒரு கட்சியாக மட்டுமல்ல, ஒரு நாடாகவும் – என்னுடன் இருங்கள்” என்று நிக்கி ஹேலி கூறினார்.