விருதுநகர் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள விருதுநகர் வந்திருந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான கே.சிவன் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவிலில் தனது மனைவி மாலதியுடன் தரிசனம் செய்தார். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மற்ற நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு நம்முடைய தொழில் வளர்ச்சி எந்த அளவு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், மற்ற நாடுகளுக்கு சவால் விடுவது நமது நோக்கமல்ல. நம்முடைய தேவையை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை முதல் நோக்கமாகும் என்றார்.
ராக்கெட் அனுப்புவதற்கான செலவு மற்ற நாடுகளைக் காட்டிலும் நம்முடைய நாட்டில் குறைவாக உள்ளதால், மற்ற நாடுகள் நம்முடைய நாடு மூலமாக அனுப்ப விரும்புகின்றனர் என்றார். உதாரணமாக 1 வெப் நமது நாடு மூலமாக அனுப்பி வைத்தனர். மற்ற நாடுகள் நம்முடைய வளர்ச்சியைக் கண்டு நம்முடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப விரும்புகின்றனர் என்றார்.
குலசேகரத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்துக்கு மாநில அரசு நிலம் அளித்து விட்டது . கட்டுமான பணிகளுக்கான ஆயத்தப் பணிகள்நடைபெற்று வருகிறது. மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் துவங்கப்படும். அவ்வாறு துவங்கப்படும் போது தென் மாவட்ட வளர்ச்சி அதிகரிக்கும். தென் மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி பெருகும் என்றார்.
ராக்கெட்டுகளை விண்ணில் ஏக பூமத்திய ரேகை ஒரு முக்கியமான கணக்காகும். எந்த அளவிற்கு இந்த பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுகிறோமோ அந்த அளவிற்கு திட்டம் எளிதில் வெற்றி பெறும். ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகையிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்திருக்கிறது. ஆனால் குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் அமைந்திருக்கிறது. எனவே இங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்போது எரிபொருள் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நெல்லை மாவட்டத்தின் மகேந்திரகிரி திரவ இயக்க அமைப்பு மையத்திலிருந்து தான் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் கொண்டு செல்லப்படும் நிலையில் அதன் உதிரிபாகங்களும் இங்கிருந்துதான் சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைத்தால் போக்குவரத்து செலவுகளும் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குலசேகரப்பட்டினத்திலிருந்து விரைவில் ராக்கெட் ஏவும் பணி தொடங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறியிருப்பது தமிழ்நாடு மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.