கொஞ்சம் அந்த பக்கம் பாருங்கள்…!! பாதயாத்திரையில் பயங்கரவாதிகள்: 'திகில்' அனுபவங்களை பகிர்ந்த ராகுல் காந்தி

கேம்பிரிட்ஜ்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது தமிழகம் தொடங்கி, தென்மாநிலங்கள், வடமாநிலங்களை கடந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்கும் பயணம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி இறுதியில் காங்கிரசின் பாதயாத்திரை நிறைவடைந்தது.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில், ’21-ம் நூற்றாண்டில் கவனிப்பதற்கான பயிற்சியில்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசும்போது காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் நடந்த சம்பவங்களை பற்றி விவரித்து கூறினார்.

அப்போது, பயங்கரவாதிகளை நேருக்கு நேராக பார்த்த திகில் அனுபவங்களை ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார். அதுபற்றி அவர் கூறும்போது, இப்போது நான் கூற போவது உண்மையில் சுவாரசியம் நிறைந்தது. நாங்கள் அனைத்து மாநிலங்களையும் கடந்து சென்றோம். காஷ்மீரிலும் பயணித்தோம். அது ஊடுருவல் அதிகம் நிறைந்த பகுதி.

நிறைய வன்முறைகள் அந்த பகுதியில் நடந்து உள்ளன. பல ஆண்டுகளாக நிறைய வன்முறைகள் நிகழ்ந்து உள்ளன. காஷ்மீருக்குள் நான் நுழைந்ததும் பாதுகாப்பு வீரர்கள் என்னிடம் வந்து, கவனியுங்கள்.

நாங்கள் உங்களிடம் பேச வேண்டும் என கூறினர். அவர்கள், நிலைமை என்னவென்றால், நீங்கள் காஷ்மீரில் பாதயாத்திரையை மேற்கொள்ள முடியாது. அது நல்ல முடிவும் அல்ல என கூறினார்கள்.

நாங்கள் அப்போது, 3 நாட்களாக பல கடினம் நிறைந்த மாவட்டங்களை கடந்திருந்தோம். அவர்களிடம் நான், ஏன் காஷ்மீரில் நான் பாதயாத்திரை மேற்கொள்ள முடியாது? என கேட்டேன். அதற்கு அவர்கள், உங்கள் மீது கையெறி குண்டுகள் வீசப்படலாம் என கூறினர்.

என்னை சுற்றி 120 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அதனால், அவர்களிடம் சென்று, நம் மீது கையெறி குண்டுகள் வீசப்படலாம் என பாதுகாப்பு அமைப்பினர் கூறுகின்றனர் என கூறினேன். பின்னர், வெளிப்படையாக கூறுவதென்றால் நான் யாத்திரை போக விரும்புகிறேன். கையெறி குண்டுகள் வீசினால் வீசட்டும் என கூறினேன்.

அவர்களும், ஆம், நாம் நடந்து செல்ல வேண்டும் என கூறினார்கள். அதன்படியே முடிவெடுத்தோம். உடனே, எல்லா இடங்களிலும் தோன்றிய இந்திய கொடிகளை நான் பார்த்தேன்.

முதல் நாளில், 2 ஆயிரம் பேர் கூட்டத்தில் திரண்டு வருவார்கள் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், 40 ஆயிரம் பேர் திரண்டனர். பாதுகாப்பிற்காக ஜீப்பில், போலீசாருக்கு நடுவில் நான் அமர வைக்கப்பட்டேன்.

அவ்வளவு கூட்டத்தில் மக்களை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. பாதுகாப்பு நடைமுறையை செயல்படுத்த போலீசார் திணறினர். அப்போது, ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது. நாங்கள் கொல்லப்பட போகிறோம் என்று எங்களிடம் கூறப்பட்டு இருந்தது. நாங்களும் நடந்தபடி இருந்தோம்.

எங்களுடன் மக்கள் வந்தபடி இருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் என்னை நோக்கி, அழைப்பு விடுங்கள் என கூறினார். நானும், வாருங்கள் என்றேன்.

அப்போது, பாதுகாப்பு படையினர் என்னிடம், தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்… மக்களை அழைக்காதீர்கள். ஏனெனில் அது ஒவ்வொருவரையும் ஆபத்திற்கு உள்ளாக்கி விடும் என கூறினர்.

நான் கூப்பிட்டதனால், அந்நபர் என்னருகே வந்து, என்னுடன் நடந்தபடி, மிஸ்டர் காந்தி, நீங்கள் காஷ்மீருக்கு வந்து நாங்கள் கூறுவனவற்றை கவனிக்க வந்துள்ளீர்கள் என்றார். நானும் நடந்தபடி, ஆம் என்றேன்.

அதற்கு அவர், மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அதன்பின்னர் அவர், சற்று அந்த பக்கம் திரும்பி அவர்களை நோக்கி பாருங்கள்? என்று கூறி நடந்து சென்றார். நான் யாரை? என்றேன். அந்த பகுதியில் இருக்கும் இளைஞர்களை பாருங்கள் என பதில் வந்தது. அவர்கள் பயங்கரவாதிகள் என அவர் கூற வந்தது போல் இருந்தது.

அதனால், தற்போது பயங்கரவாதிகள் எங்களை கொல்ல கூடும் என்ற நிலை காணப்பட்டது. அந்த ஒரு சூழலில், கூட வந்த நபர், அவர்கள் நிற்கிறார்கள்.. உங்களை அவர்கள் பார்க்கிறார்கள் என கூறினார்.

எனக்கு, சற்று முன் என்னிடம் கூறியது போன்று, நான் பிரச்சனையில் இருக்கிறேன் என தெரிந்தது. சரி என்று நினைத்து கொண்டேன். அவர்கள் என்னை பார்த்தனர், நானும் அதே பார்வையை பதிலாக தந்தேன். அதன்பின் தொடர்ந்து நடந்தோம்.

ஒன்றும் நடக்கவில்லை. இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால், அவர்களால் உண்மையில் எதுவும் செய்ய முடியாது. உண்மையில், அவர்கள் விரும்பினால் கூட, எதுவும் செய்ய கூடிய ஆற்றல் அவர்களுக்கு கிடையாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஏனென்றால், இந்த சூழலை கவனித்த பின்னரே நான் வந்து உள்ளேன். கவனித்தல் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் ஆற்றலுக்கான அடையாளம் ஆக அது இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.