தஞ்சை – மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேர் காயம்; பாலத்தில் தவறி விழுந்து காளை உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். மேலும், வாடிவாசலில் இருந்து வெளியே வந்த ஒரு காளை மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 652 காளைகள், 370 வீரர்கள் கலந்துக்கொண்டனர். காளைகளையும், வீரர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து களத்துக்குள் அனுப்பினர். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் துவக்கி வைத்தார். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வாஷிங்மிஷின், ப்ரிட்ஜ், பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் குடம், குவளை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

அவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்க முயன்ற 9 வீரர்கள், 16 காளை உரிமையாளர்கள், ஒரு பார்வையாளர் என 26 காயமடைந்தனர். இதில் 12 பேர் உள்நோயாளிகளாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 50 பேர் கொண்ட வீரர்கள் மாடு பிடிக்க களமிறக்கப்பட்டனர். தமிழ் பல்கலைகழக போலீஸார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

காளை உயிரிழப்பு: இந்நிலையில், அரியலுார் மாவட்டம் வெங்கனுார் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து, காளை வடிவாசலை விட்டு வெளியே ஓடியது. காளை உரிமையாளர் பிடிக்க துரத்திச் சென்றார். அப்போது, காளை மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலத்தின் மீது ஏறி ஓடியபோது, பாலத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்து அதே இடத்திலேயே உயிரிழந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காளையின் உடலை உரிமையாளர் கண்கள் கலங்க அங்கிருந்து தனது கிராமத்துக்கு எடுத்துச் சென்றார். இதுகுறித்து காளை உரிமையாளர் முத்துக்குமார் கூறும்போது, ” காளைக்கு சொக்கதங்கம் என பெயரிட்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக பிள்ளை போல வளர்த்து வந்தேன். இது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை வாங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் காளை பிடிப்படாமல் வெற்றி பெற்று இரண்டு பரிசுகளை வென்றது. வடிவாசலில் இருந்து வெளியே வந்த காளை, பாலத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தது, எங்களது குடும்பத்தில் அனைவருக்கும் இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.