தமிழகத்தின் பொருளாதாரம் பலவீனமாகும் – நாராயண் திருப்பதி எச்சரிக்கை.!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவி வரும் சூழலில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயண் திருப்பதி எதிர்வினையாற்றியுள்ளளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது; பீகார் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்துவதாக வரும் செய்திகள் அனைத்தும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. வெட்கக்கேடானது. தமிழர்கள் யாரையும் புண்படுத்தும் கலாச்சாரம் கொண்டவர்கள் அல்ல.

ஆனால், தி மு க கூட்டணியில் உள்ள சில அமைப்புகள், கட்சிகள் திட்டமிட்ட ரீதியில் இந்த விவகாரத்தில் பீகார் மற்றும் வட மாநிலத்தவர்கள் குறித்து தேவையில்லாத கருத்துகளை விமர்சிப்பது அரசுக்கும், காவல்துறைக்கும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. எங்கேயோ நடப்பதை தமிழகத்தில் நடப்பதாக சித்தரிப்பதும், தமிழர்களை கொடுங்கோலர்களாக அடையாளம் காட்டுவதும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை சேர்ந்தவர்கள் அல்லது திமுக ஆதரவு அமைப்புகள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான் இந்த விவகாரத்தில் காவல்துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை..

பீகார் மற்றும் வட மாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்ற வதந்தியை பரப்புவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.

தமிழ்நாடு உற்பத்தி மாநிலம். பல்வேறு கட்டமைப்புகளுக்கான அன்றாட பணிகளில் தமிழர்களை விட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. அதற்கு காரணம் தமிழன் முன்னேறி விட்டான், படித்து விட்டான், இனி கூலி தொழில் பார்க்க வேண்டிய தேவையில்லை என்று பெருமை பேசிக்கொண்டு வட மாநிலங்களிலிருந்து வரும் கூலி தொழிலாளர்களை பானி பூரி விற்பவன், பகோடா விற்பவன், கட்டிட தொழிலாளி என்று வசை பாடி வன்மத்தை காட்டுவதோடு, அவர்கள் தமிழர்களுக்கு போட்டியாக வருகிறார்கள் என்று கதை கட்டி விடுவது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது? மெட்ரோ, நெடுஞ்சாலை துறை, மின் துறை என அனைத்து துறைகளின் பணிகளிலும் பிற மாநிலத்தவர்கள் கடும் உழைப்பு தமிழகத்தின் வலிமைக்கு வலு சேர்க்கிறது.

விவசாய கூலி பணிக்கும், கடைகள், ஓட்டல்கள், ஓட்டுனர்கள் என் எங்கெங்கு காணினும் பிற மாநிலத்தவர்களே நிறைந்து நிற்கும் அளவிற்கு தமிழகமெங்கும் நமக்காக கட்டமைப்பு பணியாட்களாக இருக்கும் அவர்கள் மீது வன்மம் கொண்டு அவர்களை தமிழகத்தை விட்டு துரதியடிக்க நினைத்து தவறான வதந்தியை பரப்புவோர் யார் என்று தமிழக காவல்துறைக்கும், அரசுக்கும் தெளிவாக தெரியும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், வந்தாரை வசைபாடுவது ஏன்?

இது போன்ற நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் தொழில் துறை தள்ளாட கூடிய நிலைமைக்கு செல்லும் என்று தமிழக அரசு உணரவேண்டும். தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழ்நிலை உருவாகும். ஒப்பந்ததாரர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.கட்டமைப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் பலவீனமாகும். தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கும் அற்ப புதர்களை தமிழக அரசு அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த சில நாட்களாக காவல்துறை மறுப்பு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி வருவது ஆறுதல் அளித்தாலும், ஒரு சில அமைச்சர்களின், தி மு க கூட்டணி கட்சியினரின் , ஆதரவு அமைப்பினரின் வாயை கட்டி போடுவது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பொறுப்பு மற்றும் கடமை என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.