தூத்துக்குடி மாவட்ட சீனியர் பெண்கள் கபடி அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கபடி போட்டி
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில சீனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தளபதி திடலில் நடக்கிறது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் 23.03.23 முதல் 26.03.23 வரை அரியானா மாநிலத்தில் நடைபெறும் 69-வது தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் விழுப்புரத்தில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட சீனியர் பெண்கள் கபடி அணியும் கலந்து கொள்ள உள்ளது.
வீராங்கனைகள் தேர்வு
இந்த அணிக்கான வீராங்கனைகள் தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. எடை 75 கிலோவுக்குள் இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ள வீராங்கனைகள் நாளை மதியம் 1.30 மணிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். மதியம் 2 மணிக்கு தேர்வுகள் தொடங்கும். இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.