நாங்க நிம்மதியா இருக்கோம்… வடமாநில தொழிலாளர்கள் பேட்டி..!

தமிழகத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் காத்திருந்த வட மாநிலத்தவர்களிடம் இப்பிரசினையை குறித்து கேட்டபோது அவர்கள் தெரிவித்தது.

ராஜூ ராம், பீகார்

”தமிழ்நாட்டை நம்பி வந்தோம்; நீண்ட நாட்களாக வேலை பார்க்கிறோம். கம்பெனியிலும் சரி, வெளியேயும் சரி, தமிழர்கள், சகோதரர்களை போல் பழகுகின்றனர். எங்கேயோ, ஏதோ வீடியோவை எடுத்து, இப்படியெல்லாம் குழப்பம் செய்கின்றனர். எங்களுக்கு முதலில் பயமாகத்தான் இருந்தது; எங்கள் மேனேஜர் தான் தைரியம் சொன்னார்…”

வினீஸ்

நான் ஹோலி பண்டிகைக்காக ஊருக்கு போறேன்.. இங்க எந்த பிரச்சினையும் இல்லை.. நானும் எங்க அண்ணனும் தமிழ்நாடு கோயம்புத்தூருக்கு வந்து ஒரு வருஷம் ஆயிடுச்சி… எந்த பிரச்சினையும் இல்ல.. நான் ஊருக்கு போயிட்டு திரும்ப பத்து நாள் கழிச்சி இங்க வருவேன்… இப்போ பரவிட்ருக்க வீடியோ எல்லா சும்மா…

ராகுல்

ஹோலி பண்டிகை இருக்க அண்ணா ஊர்ல.. அதுக்குதான் போயிட்டு இருக்கேன் வேற எந்த பிரச்சினையும் இல்ல…

அலி அன்சார், பாட்னா

”அந்த வீடியோவை பார்த்து பயந்துவிட்டோம்; எங்கள் வீட்டில் இருந்து, பயத்துடன் விசாரித்தனர். திருப்பூரில் அப்படி இல்லை; பாதுகாப்பாக இருப்பதாக கூறிய பிறகே நிம்மதி அடைந்தனர். திருப்பூர் மிக மோசமாக இருப்பது போல், வடமாநிலங்களில் செய்தியை பரப்பிவிட்டனர். இங்கு, பனியன் நிறுவனங்களில் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறோம்”

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவர்களுக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
கண்டனம் தெரிவித்ததுடன் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி சிலர் தமிழக மக்களுக்கு அவ பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பரபரப்பு அரசியல் ரீதியாக குறைந்துள்ளது. இதற்கிடையே, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.