நாம் தமிழர் கட்சி சந்தித்த இடைத்தேர்தல்களில் ஈரோடு கிழக்குக்கே முதன்மை இடம்: சீமான் பெருமிதம்

சென்னை: “நாம் தமிழர் கட்சி சந்தித்த இடைத்தேர்தல்களிலேயே ஈரோடு கிழக்கு முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது. புரட்சிக்கான முதல் விதையாகவே இதனைப் பார்க்கிறேன்” என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், இரண்டாவது வாக்குப் பெட்டியில் 22-வது வரிசை எண்ணிலிருந்த விவசாயி சின்னத்தைத் தேடித்தேடி வாக்களித்த 10,827 அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மாற்று அரசியல் புரட்சியை நிறுவிடப் போராடும் எளிய பிள்ளைகளான எங்களுக்குப் பெருத்த நம்பிக்கையை அளிக்கிறது. கொள்கையில் தடுமாறாமல் நின்றால் சனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட மக்கள் கைவிடமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். தேர்தல் களத்தில் தொய்வின்றி எங்களது பயணம் தொடர உங்களின் ஒவ்வொரு வாக்கும் ஆக்கமும் ஊக்கமும் தருகிறது.

பல நூறு கோடிகளையும், பரிசு மழைகளையும் கொட்டிய தேர்தலில் அவற்றுக்கெல்லாம் விலைபோகாது அறத்தின் பக்கம் நின்று உணர்வுப்பூர்வமாக மக்கள் அளித்த ஆதரவு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. பணபலம், அதிகார பலம், பட்டிகளில் அடைத்து வைத்து மக்களைச் சந்திக்கவிடாமல் ஆளுங்கட்சியினர் செய்த சனநாயக படுகொலை, குண்டர்களை ஏவி நடத்திய வன்முறை வெறியாட்டம், தேர்தல் ஆணையத்தின் செயலற்றத்தன்மை என அத்தனை தடைகளையும் தாண்டி இடைத் தேர்தலிலேயே 10,827 வாக்குகளை நாம் பெற்றுள்ளோம் என்றால் பொதுத்தேர்தல்களில் இது பன்மடங்காகப் பெருகும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அவற்றின் கூட்டணிக்கட்சிகள், அரசு அதிகார அமைப்புகள் என எல்லோரும் ஒன்றுகூடி, நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முயன்ற தேர்தலில் நாங்கள் வீழ்ந்துவிடாது மக்களாகிய நீங்கள் எங்களைத் தாங்கி பிடித்துள்ளீர்கள். நீங்கள் அளித்த வாக்குகள் எங்களுக்கு மட்டுமல்லாது தேர்தல் களத்திற்கு வர விரும்பும் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சந்தித்த இடைத்தேர்தல்களிலேயே ஈரோடு கிழக்கு முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது. புரட்சிக்கான முதல் விதையாகவே இதனைப் பார்க்கிறேன்.

இரவு பகல் பாராது, ஊன் உறக்கமின்றி, இருக்க இடமின்றி, பரப்புரையில் ஏற்பட்ட பற்பல இடையூறுகளைப் பொருட்படுத்தாது, ஆளுங்கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகி, குருதி சிந்தி, வழக்குகளை எதிர்கொண்டு, துணிச்சலுடன் அயராது மக்களைச் சந்தித்து வாக்கினைப் பெற உழைத்த, என் உயிருக்கினிய எனதருமை தம்பி, தங்கைகள் ஒவ்வொருவருக்கும் எனது இதயப்பூர்வமான அன்பும், புரட்சி வாழ்த்துகளும். உங்களின் அயராத உழைப்பையும், ராணுவ கட்டுப்பாட்டுடனான ஒழுங்கையும் எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்.

தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வுறாது, அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, நெஞ்சுரத்துடன் அயராது உழைத்த ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை மேனகா நவநீதனுக்கு எனது அன்பும், வாழ்த்துகளும். இன்றில்லை என்றாலும் விரைவில் உறுதியாக வெற்றியை பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திற்குள் நீங்கள் நுழைவதற்கு உங்களுக்கு துணைநிற்பேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாள் முதல் வாக்கு எண்ணிக்கை நாள் வரை களத்தில் நின்று அயராது பாடுபட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகளும், அன்பும்… நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தேர்தல் களத்தில் என் தோளுக்குத் துணையாக நின்று வலிமை சேர்த்த ஆதரவளித்த பல்வேறு அமைப்புகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், நல்லவைகளை நாடுகின்ற நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட கட்சிகள் கொடுத்த பணம், பொருட்களை துச்சமென மதித்து, மாற்றத்தை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று நம் மீது பெருத்த நம்பிக்கை கொண்டு நமக்கு வாக்களித்த ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் காப்பாற்ற, ஒன்றுக்கு ஆயிரம் மடங்காக இன்னும் வீரியமாக களத்தினில் உழைப்பினை செலுத்த நாம் அனைவரும் அணியமாவோம். இலக்கு ஒன்றுதான்… இனத்தின் விடுதலை. புரட்சி எப்போதும் வெல்லும், அதை நாளை பெறவிருக்கும்‘நாம் தமிழர்’ வெற்றி சொல்லும்” என்று சீமான் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.