சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெங்களூருவில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள ஜே.எல் நகைக்கடையில் கடந்த மாதம் 10ம் தேதி வெல்டிங் மிஷின் ஷட்டரில் ஓட்டை போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு அந்த காரின் பதிவின் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் தனிப்படை போலிஸாரால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பெங்களூரு தொட்ட புல்லாபுரா பகுதியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகியோரை பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீசார் கைது செய்து சென்னை திரு.வி.க நகர் போலீசாரிடம் இன்று காலை ஒப்படைத்தனர். இதனை அடுத்து இரு கொள்ளையர்களையும் திருவி.க நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் “பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 6 பேர் ஈடுபட்ட நிலையில் இவர்கள் அனைவரும் பெங்களூர் பகுதியில் உள்ள ஒரே அறையில் தங்கி இருந்து கொள்ளையடித்த நகைகளை பங்கு பிரிக்கும் பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த நேற்று முன் தினம் ஒரு அறையில் 2 இளைஞர்கள் சண்டை போட்டுக் கொள்வதாக பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகியோரை கைது செய்த கர்நாடக போலீசார் அவர்களிடம் துருவித் துருவி விசாரணை செய்த பொழுது பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 2.5 கிலோ தங்க நகைகளை பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரான அருண் மற்றும் கௌதம் ஆகியோர் தலைவராக உள்ளனர். தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகியோரை விசாரணை நடத்தும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிவரும் எனவும், கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.