வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி, ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பதறிப்போன பெற்றோர், மாணவியை அருகிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்தனர். இதனைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, மாணவியிடம் அவருக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விசாரித்தனர். அவர் அச்சமடைந்து பாலியல் குற்றவாளியைக் காட்டிக்கொடுக்க தயங்கியதை பார்த்த மருத்துவர்கள், உடனே பள்ளிகொண்டா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பெண் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில், உண்மைத் தெரியவந்தது.
மாணவியை அவரின் தாய்மாமனே ஆசை வார்த்தைகளைக்கூறி பலமுறை பாலியல் வன்கொடுமைச் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிகொண்டா அடுத்திருக்கும் வசந்தநடை பிள்ளையார் கோயில் தெருவில் தங்கியிருந்த 37 வயதான தாய்மாமன் ராஜேந்திரனை போலீஸார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், ராஜேந்திரனுக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 ஆண் பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது. தாய்மாமன் என்பதால் மாணவி வெகுளியாக பழகியிருக்கிறார். இதனை தனக்கு சாதமாக்கிக் கொண்டு அத்துமீறியிருக்கிறார் ராஜேந்திரன். பெற்ற மகளைபோல பாவிக்க வேண்டிய சகோதரியின் மகளிடம் ராஜேந்திரன் அத்துமீறியிருப்பது, அவரின் உறவினர்கள் இடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கைது செய்யப்பட்ட ராஜேந்திரனை ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.