“ஆறு மாதங்களுக்குப் பிறகு ‘தி லெஜண்ட்’ ஓ.டி.டி-யில் வெளியாகியிருப்பதால், ரசிகர்களைப் போலவே நாங்களும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். ‘ஓடிடி ரிலீஸ் எப்போ சார்’ என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. தியேட்டர்களில் படத்தை மிஸ் செய்தவர்கள், ஓடிடியில் காண அந்தளவுக்கு ஆவலுடன் இருந்தார்கள். தற்போது, ‘தி வெய்ட் ஈஸ் ஓவர்’ என்று கொண்டாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது” என்று உற்சாகப் பூரிப்புடன் பேசுகிறார் இயக்குநர் ஜே.டி.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணனின் `தி லெஜண்ட்’ படம் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ளதையொட்டி, அப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஜே.டி-யைத் தொடர்புகொண்டு பேசினேன்.
“‘தி லெஜண்ட்’ படத்தை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மாஸ் படமாகத்தான் உருவாக்கினோம். சரவணன் சாரும் ‘ரஜினி, விஜய் சார் படங்கள் மாதிரி மாஸ் படமாகப் பண்ணவேண்டும்’ என்றே விரும்பினார். அவர் விருப்பப்படியே உருவாக்கினோம். அதேநேரத்தில், இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதையும் அதற்கான, ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதையும் விரிவாகக் காட்டினோம். ஆனால், இந்த முக்கியமான கருத்துகள் மக்களால் பெரிதாகக் கவனிக்கப்படாமல் மாஸ் ஐட்டங்கள் மட்டும் கவனிக்கப்பட்டன. மையக்கருத்து கவனிக்கப்படவில்லையே என்ற சின்ன வருத்தம் மட்டும் இருந்து வந்தது. தற்போது, ஓடிடியில் வெளியாகிவிட்டதால் இனி அதுவும் கவனிக்கப்படும்.
மேலும், படத்தில் நிறைய சீனியர் நடிகர்கள் நடித்திருந்தார்கள். விவேக் சாரின் கடைசிப் படம் இது. மயில்சாமி சாரும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இதுவும் பேசப்படும்” என்பவர் படம் ஓ.டி.டி ரிலீஸுக்குத் தாமதமான காரணங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“‘தி லெஜெண்ட்’ ரிலீஸுக்கு முன்பே பயங்கர டிமாண்ட் இருந்தது. நிறைய ஓ.டி.டி-க்கள் வெளியிடக் கேட்டார்கள். டிரெய்லரே எக்கச்சக்க வியூஸ்களைக் குவித்தது. சரவணன் சார்தான் படத்தின் தயாரிப்பாளர். அதனால் தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு, ஒரு தயாரிப்பாளராக ஓ.டி.டி-யில் வெளியிடுவதுப் பற்றி முடிவெடுக்காமல் இருந்தார். ஓ.டி.டி ரிலீஸ் எப்படிப் பண்ணலாம் என்பதைத் தீர்மானிக்கக் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டார். வேறொரு பெரிய அறிவிப்புடன் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட வேண்டும் என்ற திட்டமெல்லாம் வைத்திருந்தார். ஆனால், இடையில் என்ன நினைத்தார் என்பது தெரியவில்லை. தற்போதுதான் படம் வெளியாகியுள்ளது. ஆனால், லேட்டா வந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். நேற்றிலிருந்து நிறைய பேர் படம் பார்த்துவிட்டு பாராட்டுகளைக் குவித்து வருகிறார்கள். குறிப்பாக, சரவணன் சாரின் பிசினஸ் வட்டத்தினரின் வாழ்த்துகள் மிகப்பெரியது. தியேட்டருக்கே செல்லாமல் பரபரப்பாக இயங்குபவர்கள் அவர்கள். அவர்களெல்லாம் தற்போது ஓ.டி.டி-யில் படத்தைப் பார்த்துவிட்டு அசந்துபோய் பாராட்டி வாழ்த்துகிறார்கள்.
தொழில்துறையிலிருந்து ஒருவர் வந்து, இவ்வளவு உழைப்பைக் கொட்டி நடிப்பது சவாலான ஒன்று. படத்தில் ஆறு பாடல்கள். நூறு டான்சர்கள் மத்தியில் ஆடினார் சரவணன் சார். அத்தனைப் பேருடன் ஃபைட் செய்துள்ளார். லெஜெண்டரி நடிகர்கள் பிரபு, நாசர் சாருடன் டயலாக் பேசி நடித்துள்ளார். இதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம்.
நாளை படப்பிடிப்பு என்றால், இரண்டு நாள்களுக்கு முன்பே ஸ்கிரிப்ட்டை எடுத்துச்சென்று முன் தயாரிப்புடன் வருவார். அனைத்தையும் உள்வாங்கி நடிப்பார். அதிக டேக் வாங்கி சீனியர் நடிகர்களின் நேரத்தை வீணடித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும் போகப்போக ஈஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தியேட்டரில் அவரது நடிப்பை பார்க்கும்போது எங்களுக்கே பிரமிப்பாக இருந்தது” என்பவரிடம் “படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வருகிறதே?” என்றேன்.
“பெரிய நடிகர்கள் படங்களுக்கே நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருகின்றதே? அதுபோலத்தான், இந்தப் படத்திற்கும் வருகிறது. ஆரம்பத்தில் பலர் ட்ரோல் மெட்டீரியலாகவே சாரைப் பார்த்தார்கள். அதையும் தாண்டித்தான் அவர் இந்தப் படத்தில் நடித்தார். ரொம்ப பாசிட்டிவானவர் சரவணன் சார். விமர்சனங்களையெல்லாம் ஈஸியாகக் கடந்து வந்துவிட்டார்.
`பத்து பேர் படத்தைப் பாராட்டுவார்கள். சிலருக்குப் பிடிக்காமலும் போகலாம். எல்லோருக்கும் பிடித்தமாதிரி எப்படிங்க எடுக்க முடியும்?’ என்று சொல்லி எங்களுக்கே எனர்ஜுயூட்டுவார். அதனால், தன்னை ட்ரோல் செய்பவர்கள் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.
ஓ.டி.டி-யில் படத்தைப் பாருங்கள். இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று நினைக்காமல் திறந்த மனதுடன் அணுகினால் ‘தி லெஜெண்ட்’ கட்டாயம் உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்குப் படமாக இருக்கும். எல்லா எமோஷனும் இன்ஃபர்மேஷனும் படத்தில் இருக்கு. நிச்சயம் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க. ரெஸ்பான்ஸும் அதிகமா கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு” என்கிறார் உறுதியுடன்.