சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய தனியார் அமைப்பின் நிர்வாகியான ராஜூ ஹரிஷின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனிதஉரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு, கடந்த பிப்.26-ம் தேதி,சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பல்வேறுதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதும், நடிகர் வடிவேலு,இசையமைப்பாளர் தேவா, ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பலருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் இந்த பட்டங்களை வழங்கினார். இந்நிலையில், அண்ணா பல்கலை.யில் ஓய்வுபெற்ற நீதிபதியை பிரதானமாக வைத்து இந்த தனியார்அமைப்பு நடத்திய பட்டமளிப்பு விழா நிகழ்வும், திரைப் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதும் சர்ச்சையானது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அந்தஅமைப்புக்கு எதிராக கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல தனது கையெழுத்தை சிபாரிசு கடிதம் வழங்கியதாகக் கூறி தவறாக பயன்படுத்தியுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் போலீஸில் புகார் செய்யப் பட்டது.
அதன்படி இந்த நிகழ்ச்சியை நடத்திய தனியார் அமைப்பின் இயக்குநரான ராஜூ ஹரிஷ் மீது போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கோட்டூர்புரம் போலீஸார்பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் அளிக்கக் கோரி சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜூ ஹரிஷ், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘‘படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு இலவச கல்விவழங்குவது மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். மேலும், இந்தத் துறைகளில் சிறந்துவிளங்குபவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறோம்
அதன்படி நடந்த இந்த நிகழ்வுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக தவறாக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற நீதிபதி அளித்தபுகாரின்பேரிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது, என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பல்கலை. பதிவாளருக்கு கடிதம்: இதற்கிடையே இந்த விவகாரம்தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு 10 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு கோட்டூர்புரம் போலீசார் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழாவுக்குஅனுமதி கேட்டது யார்? கொடுத்தது யார்? விழா நடைபெற்ற அரங்கத்தின் பொறுப்பு அதிகாரி யார்? உங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவுரவ டாக்டர் பட்டம் விழா பற்றி நிர்வாகத்துக்கு ஏன் தெரியவில்லை? உள்ளிட்ட கேள்விகள் அடங்கி உள்ளன.
இந்த 10 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதிலை வருகிற திங்கள்கிழமைக்குள் அளிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.