தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் இந்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து பிபிசி, Alt News போன்ற ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. சில பாஜக நிர்வாகிகள் இதுதொடர்பாக ஒரே மாதிரியாக ட்வீட் போட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
பிகாரிகளுக்கு ஆபத்தா?
குறிப்பாக பிகாரிகளை குறிவைத்து தமிழர்கள் செயல்படுவது போல் ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றனர். இதை தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
, பிகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்புடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு எதிரான பிம்பத்தை கட்டி எழுப்ப முயற்சிப்பதாகவும், தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு எதிராக வலதுசாரி அரசியலை முன்னெடுக்கவும் முயற்சிகள் நடைபெறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டரில், ”தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். முன்னதாக ஹோலி பண்டிகையை ஒட்டி ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
வெளியேறும் வட இந்தியர்கள்
இதுதொடர்பான வீடியோக்களை சுட்டிக் காட்டி தமிழ்நாட்டில் இருந்து அச்சம் காரணமாக வெளியேறிவதாக வதந்தி பரப்பப்பட்டது. ஆனால் அவர்களிடம் நேரடியாக பேட்டி எடுக்கையில், தமிழ்நாட்டில் தங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஹோலி கொண்டாட சொந்த ஊர் செல்கிறோம். ஒரு வாரத்தில் மீண்டும் திரும்பி விடுவோம் என்று தெரிவித்தனர்.
ஊடகங்கள் மீது வழக்கு
இதற்கிடையில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட விஷயம் சீரியசானது. மாநில அரசு நேரடியாக களத்தில் இறங்கியது. வதந்தி பரப்பிய இந்தி ஊடகங்கள் மீது வழக்குப்பதிவு, வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் எச்சரிக்கையும்,
சட்டம் – ஒழுங்கு சீர்குலைக்க முயன்றால் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதிரடியாக பேட்டி கொடுத்தனர். குறிப்பாக வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்களை முழுவதும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் அவசரத்திற்கு 0421-22-3313, 94981 01300, 94981 01320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.