பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, ஒரு அரசை நிர்வகித்து வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஐ.நா., கூட்டத்தில் கைலாசாவின் துாதர்கள் எனக் கூறி, சில பெண்கள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைலாசா என்ற ஒரு தனி நாடு உள்ளதா, அதற்கு ஐ.நா., அங்கீகாரம் அளித்துள்ளதா, தனி நாட்டை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா என்பது குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான
விவாதங்கள் நாடு முழுதும் அரங்கேறி வருகின்றன. இது பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சில இடங்களில் ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா, பாலியல், கடத்தல், கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியதை அடுத்து, போலீசாரால் தேடப்பட்டார். இதையடுத்து, 2019ல் தலைமறைவானார். அவர் ஏதோ ஒரு வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கைலாசா என்ற தனி நாட்டை ஏற்படுத்தி உள்ளதாகவும், தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் நித்தியானந்தா அறிவித்தார். அவரது சிஷ்யர்கள் இது தொடர்பாக அவ்வப்போது ‘வீடியோ’க்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தான், கைலாசாவின் துாதர் எனக் கூறி, விஜயப்ரியா என்ற பெண், சமீபத்தில் நடந்த ஐ.நா., மனித உரிமைகள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நித்தியானந்தாவை மத்திய அரசு துன்புறுத்துவதாக அந்த பெண் குற்றம் சாட்டினார்.
எது கைலாசா?
தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என நித்தியானந்தா பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைலாசாவின் இணையதளத்தில், ‘கனடா, அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் கைலாசா’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இனம், பாலினம், ஜாதி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஹிந்துயிசத்தை பின்பற்றும் யார் வேண்டுமானாலும் இங்கு அமைதியான வாழ்க்கை வாழலாம் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இது விளங்கும் என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள், ஆன்மிகம், கலை மற்றும் கலாசாரத்தை எந்தவித இடையூறும் இன்றி வெளிப்படுத்தலாம் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது ஒரு கற்பனை நாடாகவே பலராலும் கருதப்படுகிறது,. தங்கள் நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு, ‘இ – விசா’ வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கைலாசா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைப் போல் கைலாசாவிலும் கருவூலம், வர்த்தகம், வீட்டு வசதித் துறை, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகள் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நாடா?
கைலாசாவை ஐ.நா., இதுவரை அங்கீகரிக்கவில்லை. இது குறித்து, ஐ.நா., தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மனித உரிமைகள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கைலாசா தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்று, மனித உரிமைகள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். ஒரு தொண்டு நிறுவனம் என்ற பெயரில், கைலாசா பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கருத்தை தெரிவித்தனர். ஆனால், அவர்கள் பேசியதை ஐ.நா., ஏற்காது. கடந்த 1993ல், உருகுவே நாட்டின் மான்டேவிடியோ நகரில் நடந்த மாநாட்டில், ஒரு நாடு ஐ.நா.,வின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் அவசியம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரையறுக்கப்பட்ட ஒரு பிரதேசம், மக்கள், அரசு மற்றும் பிற நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவை அவசியம். இவை இருந்தால் தான் ஐ.நா.,வின் அங்கீகாரம் கிடைக்கும். கைலாசாவுக்கு இதுவரை அதுபோன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இப்போதைய நிலை?
ஒரு பிரதேசம் நாடாக சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை என்றால், அதை, ‘மைக்ரோ நேஷன்’ என அழைக்கலாம். மைக்ரோ நேஷன் என்பது, சுதந்திரமான இறையாண்மை உடைய ஒரு பிரதேசமாக கருதப்படும். ஆனால், இதுபோன்ற பிரதேசங்களை, எந்த ஒரு நாடும், சர்வதேச சமூகமும் அங்கீகரிக்காது. தற்போது கைலாசாவின் நிலையும் இது தான்.
சிக்கிய அமெரிக்க நகரம்!
கைலாசா நாடு தொடர்பாக, அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த நேவார்க் நகரம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.கைலாசா நாடுடன் இணைந்து செயல்படுவதற்காக இந்த நகரம் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அந்த சகோதர ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவறு நடந்துள்ளதாக நகர நிர்வாகம் கூறியுள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘சிஸ்டர் சிட்டிஸ் இன்டர்நேஷனல்’ என்ற அரசு சாரா அமைப்பு, உலகளவில் இரு நகரங்கள் இடையே சமூக கலாசார பிணைப்பை ஏற்படுத்தும் வகையில், ஒப்பந்தங்கள் செய்வதற்கு உதவுகிறது.இந்த அமைப்பின் வாயிலாக, கைலாசாவுடன், நேவார்க் நகரம், கடந்த ஜன., ௧௨ம் தேதி ஒப்பந்தம் செய்தது.
தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் தீர்மானம், நகர கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்
பட்டு உள்ளது. ‘இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இனி நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என, நகர நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்