சேலம்: தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம், நடப்பு நிதியாண்டின் 11 மாதத்தில் ரூ.9,009 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 15 சதவீதம் அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டப் பகுதியில் இயங்கும் பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம், ஆண்டுதோறும் அதிகமான வருவாயை தெற்கு ரயில்வே ஈட்டி வருகிறது. நடப்பு நிதியாண்டில் (2022-23), கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, 11 மாத காலத்தில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம், ஒட்டுமொத்தமாக ரூ.9,009.46 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கோட்டத்திலும் வணிக மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் முயற்சியால், சரக்குகள் கையாள்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 மாதத்தில் 33.9 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது. இதன்மூலம் ரூ.3,230.46 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில். 27.4 மில்லியன் டன் சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டிருந்தது. நடப்பாண்டு 24 சதவீதம் அதிகளவு சரக்கு கையாண்டுள்ளனர். வருவாயை பொருத்தளவில் கடந்த ஆண்டில் 11 மாதத்தில் ரூ.2,456.81 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. அதேபோல், ரயில்வே நிர்வாகம் தரப்பில், சரக்கு போக்குவரத்து வருவாய் இலக்காக ரூ.2,809.60 கோடி நிர்ணயித்திருந்தனர். அதை விட தற்போது 15 சதவீதம் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் (பிப்ரவரி) மட்டும், தெற்கு ரயில்வே நிர்வாகம் 3.336 மில்லியன் டன் சரக்கு கையாண்டு, ரூ.302.25 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது இலக்கை விட 15 சதவீதம் அதிகமாகும். இதேபோல், பயணிகள் ரயில் போக்குவரத்திலும், தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது. கடந்த 11 மாத காலத்தில் 582.6 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து பயண கட்டணமான ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா ரயில்கள், விழாக்காலங்கள், முக்கிய நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு பயணிகள் போக்குவரத்து பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் 292.65 மில்லியன் பயணிகள் மட்டுமே பயணித்திருந்தனர். தற்போது, இருமடங்காக உயர்ந்து. 582.6 மில்லியன் பயணிகளுக்கான சேவையை தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது. கடந்த மாதத்தில் (பிப்ரவரி) மட்டும் 54.3 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரயில்வேக்கு ரூ.530 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 41.6 சதவீதம் அதிகமாகும்.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘நடப்பு நிதியாண்டில் 11 மாத காலத்தில், தெற்கு ரயில்வே நிர்வாகம் மிக அதிகபட்ச வருவாயாக ரூ.9,009 கோடி ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது நிர்ணயித்த இலக்கை விட 15 சதவீதம் அதிகமாகும். இதனுடன் இன்னும் ஒரு மாத கால வருவாயை சேர்க்கும்போது, இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டி பிடித்து விடுவோம். சரக்கு போக்குவரத்து அதிகரிக்கப்பட்டதன் மூலம், எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. அதே போல், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதன் மூலமும், முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து ரயில்களை இயக்குவதன் மூலமும், வருவாய் அதிகமாக கிடைக்கிறது. இதனால், மற்ற ரயில்வே மண்டங்களுக்கு முன்னோடி மண்டலமாக தெற்கு ரயில்வே விளங்குகிறது,’’ என்றனர்.