புதுடெல்லி: தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் உறுதியுடன் நின்று மக்களுக்கு பலன் தந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து இணையவழி கருத்தரங்கு மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்து வருகிறார். அந்த வரிசையில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பாக நேற்றைய இணையவழி கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வளர்ச்சி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, எந்தவொரு நாட்டின் நிலையான வளர்ச்சியிலும் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
உள்கட்டமைப்பின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்த உண்மையை நன்கு அறிவார்கள். எனவே இந்த பட்ஜெட் புதிய ஆற்றலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் நெடுஞ்சாலைகள், நீர்வழிப்பாதைகளின் முக்கியத்துவம் பல நூற்றாண்டுகளாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்னமும் மக்களுக்கு பலன் தந்து வருகிறது. அந்த வகையில் பழமையான உறுதியான கட்டமைப்புகள் இன்றும் நாட்டிற்கு உதவுகின்றன. எனவே, 2014ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட தேசிய நெடுஞ்சாலைகளின் சராசரி கட்டுமானம் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது.
அதே போல், 2014க்கு முன்பு ஓராண்டுக்கு 600 கிமீ வழித்தடங்களே மின்மயமாக்கப்பட்டு வந்தன. 2014க்குப் பிறகு ஆண்டுக்கு 4000 கிமீ மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்கள் துறைமுகத்திறனும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு தான் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருக்கும். அந்த பாதையை பின்பற்றுவதன் மூலமாக, 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை இந்தியா எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.