இந்தியா-இலங்கை கடற்பரப்பின் நடுவே அமைந்திருக்கிறது கச்சத்தீவு. இந்தத் தீவில் அமைந்திருக்கும் அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 3, 4-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் இலங்கையிலிருந்து 4,500 பக்தர்களும், இந்தியாவில் இருந்து 3,500 பேரும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து இந்தியாவிலிருந்து 60 விசைப்படகுகள், 12 நாட்டு படகுகள் மூலம் 2,500 பக்தர்கள் பங்கேற்க முடிவுசெய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு 2,500 பேர் விண்ணப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் கடற்படை அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் கச்சத்தீவுக்கு படகில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 390 அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து படகுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 59 விசைப்படகுகள், 11 நாட்டுப்படகுகள் மூலம் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 2,193 பக்தர்கள் கச்சத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கச்சத்தீவில் 3-ம் தேதி மாலை 4:30 மணியளவில் அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலுவைப் பாதையும், இரவு திருத்தேர் பவனியும் நடைபெற்றன. பின்னர் 4-ம் தேதி காலை 6 மணிக்கு ஜெபமாலையுடன் துவங்கிய திருப்பலி கூட்டுப் பிரார்த்தனையை இருநாட்டு ஆயர்களும் நடத்தினர். திருப்பலி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுடன் கச்சத்தீவு திருவிழாவானது நிறைவுபெற்றது.
அதனைத் தொடர்ந்து இருநாட்டு பக்தர்களும் தங்கள் ஊர் திரும்பினர்.
இந்த நிலையில் கச்சத்தீவில் இந்தியாவிலிருந்து சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம் இலங்கையைச் சேர்ந்த நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் (65) என்ற பெண்ணிடம் 8 பவுன் செயினைப் பறித்துச் சென்றது தொடர்பாக, இலங்கை நெடுந்தீவு போலீஸில் புகார் அளித்தார். அதேபோல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவரின் தங்கச்செயினைப் பறித்துச் சென்ற நெடுந்தீவைச் சேர்ந்த நபரை ராமேஸ்வரம் மீனவர்கள் கையும்களவுமாகப் பிடித்து இலங்கை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் சிலரின் நகைகளும் பறிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே போல் விழா முடிந்து ராமேஸ்வரம் நோக்கி விசைப்படகில் தமிழக பக்தர்கள் திரும்பியபோது, இலங்கை எல்லையைக் கடந்து தமிழக எல்லையை அடைந்து சில நாட்டிக்கல் மைல் தொலைவிலேயே படகில் டீசல் தீர்ந்து நடுக்கடலில் படகுகள் தத்தளித்து நின்றன. அப்போதுதான் படகிலிருந்த டீசல் திருடப்பட்டிருப்பது மீனவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து பின்னால் பக்தர்களை அழைத்து வந்த சக விசைப்படகு மீனவர்கள் தங்களிடம் இருப்பு வைத்திருந்த டீசலைக் கொடுத்ததும், ஒரு சில படகுகளை கயிறு கட்டி இழுத்தும் ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்ந்தனர்.
“இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்குச் சென்று, மனஉளைச்சலுடன் திரும்பியிருக்கிறோம்” என பக்தர்களும், மீனவர்களும் வேதனை தெரிவித்தனர்.