பெரம்பூர் நகைக்கடைக் கொள்ளை; போக்கு காட்டிய கொள்ளைக் கும்பல்… பெங்களூரில் கைதுசெய்த சென்னை போலீஸ்!

சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த எட்டு வருடங்களாக அதே பகுதியில் ஜே.எல்.கோல்டு பேலஸ் என்ற நகைக்கடையை நடத்திவருகிறார். ஸ்ரீதரும் நகைக்கடை அமைந்திருக்கும் இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத் திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது கடையின் இரும்பு ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டிருந்தது.

நகைக்கடை கொள்ளை

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர் கடையினுள் சென்று பார்த்திருக்கிறார். அங்கு லாக்கர் அறையின் கதவும் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டிருந்தது. அதோடு, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது கிலோ தங்கநகைகள், ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது. ஸ்ரீதர் தன் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து திரு.வி.க நகர்ப் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

சம்பவமறிந்து விரைந்துவந்த போலீஸார், கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. நகைக்கடையை ஒட்டியிருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார்ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையர்களுக்கும், இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய கார்

கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மட்டும் கர்நாடக மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. கொள்ளை நடந்து மூன்று வாரங்களைக் கடந்த நிலையிலும், இது தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காமலிருந்தது. இந்த நிலையில், நேற்று தனிப்படை போலீஸார் பெங்களூருவில் பதுங்கியிருந்த நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் இதில் தொடர்புடைய பலரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.