மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தென் மாவட்ட பிரதிநிதிகளோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மக்கள் அரசை தேடி போன காலம் மாறி மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது என மதுரை கள ஆய்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்ட வணிகர்கள், விவசாய சங்கம், மகளிர் சுய உதவிக்குழு, மீனவர் சங்கம், தொழில் வர்த்தகத்தினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தென்மாவட்டங்களின் மக்கள் நலத்திட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த நேரடி கள ஆய்வுக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றடைந்தார். அவருக்கு மதுரை திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அவைகளை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், ‘கள ஆய்வில் முதல்வர்’ என்னும் திட்டத்தை கடந்த பிப்.1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றைய தினமும் மறுநாளான பிப்.2ம் தேதியும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்ட வணிகர்கள், விவசாய சங்கம், மகளிர் சுய உதவிக்குழு, மீனவர் சங்கம், தொழில் வர்த்தகத்தினர் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து மதுரையில் கள ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையில்; ‘மக்கள் அரசை தேடி போன காலம் மாறி மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 2 மண்டலங்களில் கள ஆய்வை முடித்து உள்ளேன். 3-வது மண்டலமாக மதுரையில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். நான் செல்லும் இடங்களில் சாலையோரம் மக்கள் காத்திருந்து என்னிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கின்றனர். மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொள்வேன். மக்களின் பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். சிறு,குறுந் தொழில்துறையினர், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் குறைகளை கேட்டறிந்துள்ளேன். அனைத்து தரப்பினரின் குறைகளும் தொடர்புள்ள அரசுத்துறைகளிடம் பேசி சரி செய்யப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
பின்னர் நாளை மாலை 4 மணிக்கு, மதுரை கலெக்டர் அலுவலகத்தில், தென்மண்டல ஐஜி, மதுரை மாநகர கமிஷனர், டிஐஜிக்கள், ஐந்து மாவட்ட எஸ்பிகள் அடங்கிய போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.
இதில், சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் துறை ரீதியாக ஆய்வு செய்கிறார். பின்பு மாலை 5 மணிக்கு கீழடியில் கட்டப்பட்ட தொல்லியல் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இரவு மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.