மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சோகியோங் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்த என்பிபி கட்சி தலைவர் கான்ராட் சங்மா, 32 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் பகு சவுகானை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கான்ராட் சங்மா சமர்பித்த ஆதரவு கடிதத்தில், என்பிபி எம்எல்ஏக்கள் 26 பேர், பாஜகவின் 2 எம்எல்ஏகள், எச்எஸ்பிடிபி எம்எல்ஏக்கள் 2, சுயேட்சை எம்எல்ஏக்கள் 2 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
முன்னதாக, கவர்னரை சந்திப்பதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சங்மா “எனக்கு 32 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை உள்ளது. பாஜக தனது ஆதரவை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இன்னும் சிலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஆட்சி அமைப்பதில் திடீர் திருப்பமாக எச்எஸ்பிடிபி கட்சி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாங்கள் ஊடக அறிக்கையில் பார்த்தபடி, எச்எஸ்பிடிபி எம்எல்ஏக்கள் மெத்தோடியஸ் திஹர், ஷாக்லியர் வார்ஜ்ரி ஆகிய இருவருக்கும் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை வழங்க கட்சி எந்தவித அங்கீகாரமும் அளிக்கவில்லை என்று எச்எஸ்பிடிபி கட்சியின் தலைவர் கேபி பன்ங்னியங், செயலாளர் பன்போர்லாங் ரிந்தாதியங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் எச்எஸ்பிடிபி கட்சிக்கு எந்தவித பங்கும் இல்லை. அதனால், எங்கள் கட்சி உங்களுக்கு வழங்கி வந்த ஆதரவினை திரும்பப் பெறுகிறது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதி கவர்னருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.