''வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கலவரம் நடந்ததாகக் கூறுவது உண்மையல்ல'': கே.எஸ்.அழகிரி

சென்னை: “தமிழ்நாட்டில், நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”கரோனா தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த போது அப்போதைய மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக வாய் மூடி மெளனியாக இருந்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்? திடீரென இப்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்கள்.

வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக தங்கள் வீடு செல்ல பயணச்சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முன்வந்த முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரஸ்தான். அதை அறிவித்தது நான்தான்.அதைப்போலவே அன்னை சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலம் செல்வதற்கு பேருந்து கட்டணம் ரயில் கட்டணம் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அறிவித்தார்கள் அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார்கள்.

இந்த விவகாரத்தில் எங்கே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயர் வந்து விடுமோ என்று அஞ்சி அந்த நிதி உதவியை அப்பொழுது ஏற்க மறுத்தவர்கள் தான் இந்த ஒன்றிய பாஜக அரசும் மாநில அரசு அதிமுக ஆகும்.ஆனால் இன்று திடீரென வட மாநில தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல பேசுகிறார்கள். இவர்களுடைய போலி வேடம் தமிழக மக்களிடையே எடுபடாது. தோல்வியடையும்.

இங்கே நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.