வேளாண் பட்ஜெட் கருத்துகேட்பு கூட்டம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது

சென்னை: வேளாண் தனி நிதிநிலை அறிக்கை 2023-2024 கருத்து கேட்பு கூட்டம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் வேளாண்மை துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான தனி வேளாண் நிதி நிலை அறிக்கை குறித்து பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் தனி நிதிநிலை அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மீன்வளத் துறை செயலர் ஆ.கார்த்திக், சர்க்கரைத் துறை ஆணையர் சா.விஜயராஜ்குமார், வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி, குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் வணிகர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள், அரசு செயலர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் தெரிவித்த கருத்துகள் வருமாறு: மேட்டூர் அணையின் நீர் இருப்பு தொடர்ந்து போதியளவில் உள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதத்துக்குள் தூர்வாரிடும் பணிகளை முடிக்க வேண்டும். மாறிவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய நெல்ரகங்களை உருவாக்கி விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தமிழக அரசு பெரும் தொகையை காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்துகிறது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது மிகவும் குறைவாக உள்ளது. எனவே, தமிழக அரசுசார்பில் பயிர்க் காப்பீடு நிறுவனம் தொடங்கிட பரிசீலிக்க வேண்டும்.

சிறு தானியங்களுக்கு உரியவிலை கொடுத்து அரசே கொள்முதல் செய்து பொதுவிநியோகம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் விலை நிர்ணயிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச விலை தீர்மானித்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி தயாரித்து விற்பனை செய்ய அரசு திட்டமிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தெரிவித்த கருத்துகள் வருமாறு: ஒரு டன் கரும்புக்கு வரும் அரவைப்பருவத்திற்கு ரூ.4 ஆயிரம் விலை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனால் பாலிசியை நடைமுறைப்படுத்த வேண்டும். முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கரும்புவெட்டுக் கூலியை வரைமுறைப்படுத்த வேண்டும். பழமை வாய்ந்த ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து 2 லட்சம் கரும்பு விவசாய குடும்பங்களுக்கு சேர வேண்டிய ரூ.1,217 கோடி எஸ்.ஏ.பி.பாக்கியை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.