சென்னை: வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக சிறுநீரக தினம் மார்ச் 9ம் தேதி அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனியார் மருத்துவமனை சார்பாக சிறுநீரக உடல்நல விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ”சிறுநீரக பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில், 200 முகாம்கள் சென்னையில் நடக்கும்” என தெரிவித்தார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மா. சுப்ரமணியன், “தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் கருணாநிதி சிறப்பு பிரிவை ஏற்படுத்தினார். அது முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒன்றிய அரசு ஒருங்கிணைப்பை கொண்டு வந்தாலும் அதிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படும்” என தெரிவித்தார்.
மேலும், ”பீகார் மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், பாஜகவினர் போலி வீடியோக்களை பரப்புகிறார்கள். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது” என்று அவர் கூறினார்.