Ileana D’Cruz Ban: நடிகை இலியானா 2006ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானார். தெலுங்கில் தேவதாசு படம் மூலம் அறிமுகமான அவர், அதே வருடம், கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு மட்டும் அவர் ஆறு படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த அவருக்கு, தமிழில் பெரும் வரவேற்பை கொடுத்த படம் நண்பன்.
விஜய் – ஷங்கர் என வித்தியாசமான கூட்டணியில், இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான நண்பன் படத்தில், இலியானா விஜய்க்கு ஜோடியாக ரசிகர்களை கவர்ந்தார். மது அடித்துவிட்டு, விஜயிடம் லூட்டி அடிப்பது, விஜய் காதல் சொல்வதை ரசிப்பது, கிளைமேக்ஸ் காட்சி என இலியானாவின் ஒவ்வொரு எக்ஸ்பிரஷனும் பலராலும் ரசிக்கப்பட்டது. மேலும், ஹாரிஸ் பாடல்களில் இருந்த அத்தனை துள்ளல்களையும் தனது அங்க அசைவில் காட்டி நடனத்திலும் மிரட்டியிருந்தார், இலியானா.
அதன்பின், தமிழில் இருந்து ஒதுங்கிவிட்ட இலியானா, 2012இல், பர்ஃபி படம் மூலம் இந்தியில் அறிமுகமானாக் அடுத்து, 8 படங்களில் தொடர்ந்து இந்தியில் நடித்தார். தற்போது, தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க அவருக்கு அதிகாரப்பூர்வமற்ற தடை விதித்திருப்பதாக தெரிகிறது.
அதாவது, இந்தியில் அவர் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் அங்கு குறைவாக இருந்ததாக கூறப்பட்டது. எனவே, அவர் தென்னிந்திய படங்களில் நடிக்க முடிவுசெய்தார். அந்த வகையில், அவரிடம் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர், இலியானாவை படத்திற்கு ஒப்பந்தம் செய்து, முன்பணமும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அவர் தனது தேதியையும் ஒதுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த தயாரிப்பாளர் தென்னிந்தியா திரைப்பட சம்மேளனத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி திரைப்படங்களிலும் இலியானாவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத தடையை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இலியானா தரப்பில் எந்த தகவலும் இல்லை. இலியானா கடைசியாக, அமிதாப் பச்சனின் பிக் புல் படத்தில் நடித்திருந்தார். அதன்பின், அவர் நடிப்பில் படம் வெளியாகவில்லை. தற்போது, ரன்தீப் ஹூடா உடன் Unfair and Lovely என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.