முழுக்க முழுக்க கடன்களால் மட்டுமே வளர்ந்த கவுதம் அதானி இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறார். அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால் தொடர்ச்சியாகப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவரும் கவுதம் அதானி, வரும் 2024 -ல் அடுத்தகட்ட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
சுமார் ரூ.2.26 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வைத்திருக்கும் அதானி குழுமம், வெளிநாடுகளில் வாங்கியக் கடன் மட்டுமே ரூ.82 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கிறது. இதில் பெருமளவு கடன்கள் கடன் பத்திரங்கள் மூலமாகப் பெற்றிருக்கிறார். இந்தக் கடன் பத்திரங்கள் மூலமான கடன்கள் பலவும் முதிர்வு காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் 1.15 பில்லியன் டாலர் அளவுக்குக்கான கடன் பத்திரங்கள் முதிர்வடைந்தன. 2023 -ம் ஆண்டில் எந்தவித கடன் பத்திரங்களும் முதிர்வு காலத்தை நெருங்கவில்லை.
ஆனால் 2024-ல் 2 பில்லியன் டாலர் அளவுக்கான கடன் பத்திரங்கள் முதிர்வை நெருங்கியிருக்கின்றன. இவற்றில் 650 மில்லியன் டாலர் அதானி போர்ட்ஸ் நிறுவனமும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி மையங்கள் முறையே 750 மில்லியன் டாலர் மற்றும் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களையும் வழங்கி கடன் பெற்றிருக்கின்றன.
இந்தக் கடன் 2024-ம் ஆண்டில் முதிர்வ அடைய உள்ள நிலையில் இந்தப் பணத்தை கடன் வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் அதானிக்கு உள்ளது. அதேபோல் 2026 -ல் 1 பில்லியன் டாலர் அளவிலான கடன் பத்திரங்கள் முதிர்வுக்கு வருகின்றன.
ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அதானி இந்தக் கடனை எப்படி அடைக்கப் போகிறார், இந்திய வங்கிகளில் மீண்டும் கடன் வாங்குவாரா என்ன செய்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.