`ஈரோடு தொகுதி தே.மு.தி.க-விற்கு புதிதல்ல. 2011-ல் தேர்தலில் தே.மு.தி.க வெற்றிபெற்ற தொகுதிதான் இது. பெரியார் மண்ணில் கட்சி துவங்கப்படும் என்று கேப்டன் தெரிவித்தார். நடிகராக இருந்தபோதே, ஈரோடு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க நிச்சயம் வெற்றி பெறும்’ எனக்கூறி அதீத நம்பிக்கையோடு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரேமலதா விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் தே.மு.தி.க வேட்பாளர் ஆனந்த் டெபாசிட் இழந்ததோடு வெறும் 1,432 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்தான் இந்த இடைத்தேர்தல் என சொல்லிவந்தார் பிரேமலதா. ஆனால், இந்த தேர்தல் முடிவால் இனி என்னவாகும் தே.மு.தி.க? என்ற கேள்வி வலுவாக எழுந்திருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியும் தே.மு.தி.கவும்…
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணியமைத்துப் போட்டியிட்டது தே.மு.திக. அந்தத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் முத்துச்சாமியைவிட 10,644 வாக்குகள் அதிகம் பெற்று சுமார் 69,166 வாக்குகளுடன் பெற்று அபார வெற்றிபெற்றார் அப்போதைய தே.மு.தி.க வேட்பாளர் வி.சி. சந்திரகுமார். அந்தத் தொகுதியில் மட்டும் 50.83% சதவிகித வாக்குவங்கியைப் பெற்றது தே.மு.தி.க. அதன்பின்னர், 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட தே.மு.தி.க. ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெறும் 6,776 வாக்குகளை மட்டுமே பெற்றது. அதன்பின்னர் 2021 தேர்தலில் அ.ம.மு.கவுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர அதன் ஆதரவுடன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.ம.மு.க போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர் முத்துகுமரன் நோட்டாவுக்கும் கீழே 1,204 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.
தனித்துப்போட்டியிட்ட தே.மு.தி.க…
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படவும், `எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப்போட்டி என்று அறிவித்தார் கட்சியின் பொருளாளர் பிரேமலதா. எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு முதல் ஆளாக ஆனந்த் என்பவரை தே.மு.தி.க வேட்பாளராகவும் அறிவித்தார். அதன்பின்னர், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பிரேமலதா, எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் என முக்கியப் புள்ளிகள் அனைவரும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். டீ போடுவது, தோசை சுடுவது என மற்ற கட்சித் தலைவர்களைப்போல எல்.கே.சுதீஷிம் ஸ்டன்ஸ்ட் காட்டினார். அதேபோல, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் ஆவேசமாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் முடிவில் படுதோல்வி…
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,156 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகளுடனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்றும் தோல்வியடைந்தனர். அதேசமயம், தே.மு.தி.க வேட்பாளர் ஆனந்த் வெறும் 1,432 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.
தொண்டர்கள் துவண்டுவிடாதீர்கள்…விஜயகாந்த் அறிக்கை
தேர்தல் முடிவு குறித்து அறிக்கை வெளியிட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்,“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற நாள் வரை பண மழை பொழிந்தது. எந்த தொகுதியிலும் நடைபெறாத வகையில் வாக்காளர்களை காலை முதல் மாலை வரை அடைத்து வைத்த கொடூரமும் அரங்கேறியது. இது ஜனநாய ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. முழுக்க முழுக்க பணத்தை நம்பியே நடைபெற்ற தேர்தல். 2009-ல் தி.மு.க உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவை 14 ஆண்டுகளுக்கு பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.கவே முறியடித்து விட்டது” என குற்றம் சாட்டினார்.
மேலும், “இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்.எல்.ஏ.வாக அறிவித்து விடுங்கள். எதற்காக இந்த கண்துடைப்பு நாடகம். பண பலம் அதிகார பலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டுகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த ஓட்டுகள். இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தருமமே வெல்லும்” என தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தே.மு.தி.க எதிர்காலம்?!
இந்த நிலையில், தே.மு.தி.க எதிர்காலம் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். “தே.மு.தி.க குடும்பக்கட்சியாக மாறிவிட்டது. இப்போது, பிரேமலதா-சுதீஷ் கட்சியாக இருக்கிறதே தவிர விஜயகாந்த் கட்சியாகவே இல்லை! ஒரு கட்சி மக்கள் நம்பிக்கையைப் பெற்றிருக்கவேண்டும், அரசியல் களத்தில் நீடித்திருக்க வேண்டும் என்றால் கொள்கை, லட்சியம் இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு திராவிட மாடல் ஆட்சி, அ.தி.மு.க-வுக்கு ஜெயலலிதா எம்.ஜி.ஆர் வழியிலான ஆட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மதசார்பற்ற சோசலிச ஆட்சி, பா.ஜ.க-வுக்கு இந்துத்துவ ஆட்சி, நா.த.வுக்கு தமிழ்த்தேசிய ஆட்சி என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்தியல், லட்சியம் இருக்கிறது. ஆனால், தே.மு.தி.கவுக்கு என்ன இருக்கிறது? விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போனதுமே விஜயகாந்த்-தால் உருவாக்கப்பட்ட தே.மு.தி.க கேள்விக்குறியாகிவிட்டது.
அவருக்குப்பிறகு கட்சிப் பொறுப்பை கவனித்துவரும் பிரேமலதாவும், சுதீஷிம் அரசியல் லாபத்துக்காக, தங்களின் குடும்ப சுயநலனுக்காக கொள்கையே இல்லாமல் மாறிமாறி எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன், கடந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க-வுடனெல்லாம் கூட்டணி அமைத்தார்கள். விஜயகாந்த் நலமாக இருந்து கட்சி நடத்திருந்தால் இப்படி விட்டிருப்பாரா? கட்சி இந்த நிலைக்குச் சென்றிருக்குமா? தொடர் தோல்விகள் தமிழ்நாட்டுக்கு இனி தே.மு.தி.க தேவையில்லை என்ற சூழலைதான் உணர்த்துகிறது. எதிர்காலத்தில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் ஒன்றிரண்டு சீட்டுகள்தான் ஒதுக்குவார்கள். அதிலும் வெற்றிபெறுவது சந்தேகம்தான். எப்படிப்பார்த்தாலும் தே.மு.தி.கவின் எதிர்காலம் கேள்விக்குறி தான்!” எனத் தெரிவித்தனர்.