டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வழிச்சாலையில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள். ஆண்டுக்கொரு முறை சுங்கக் கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ.33,881 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகியுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு வசூலோடு ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகமாகும். கடந்த 2018-19 நிதியாண்டை ஒப்பிடும் போது சுமார் 32 சதவீதம் வசூல் அதிகமாகியுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடந்த 2022ம் ஆண்டு ஒரு நாளுக்குச் சராசரியாக ரூ.139.32 கோடி கட்டணமாக வசூலாகியுள்ளது. தற்போது மத்திய அரசு எக்ஸ்பிரஸ் சாலைகளில் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. அதன் படி ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.19 கட்டணமாக வசூலிக்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் சாலை கட்டணமும் வரும் ஏப்.1-ம் தேதி முதல் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி வரும் ஏப்.1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஆவணப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது. அமைச்சகம் அனுமதியளித்ததும் ஏப்.1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வைப் பொருத்தவரை இலகு ரக வாகனங்களுக்கு ஒரு ட்ரிப்பிற்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 5 விழுக்காடு அதிகமாகவும், கன ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 10 விழுக்காடு அதிகமாகவும் ஏப் 1ம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.