தென்னிந்தியாவில் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மாநிலம் கர்நாடகா. குறிப்பாக இந்த மண்டலத்தில் பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலம். எனவே ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக பாஜகவை பொறுத்தவரை செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. நான்கு முறை முதல்வர். மூன்று முறை எதிர்க்கட்சி தலைவர்.
எடியூரப்பாவிற்கு முக்கியத்துவம்
இவருக்கு லிங்காயத் சமூக வாக்கு வங்கி பலமூட்டும் வகையில் காணப்படுகிறது. ஆனால் 75 வயதாகி விட்டதால் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள திட்டமிட்டார். கட்சியிலும் கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டியே 2021ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் 2023 சட்டமன்ற தேர்தல் களம் பாஜகவிற்கு சாதகமாக இல்லை எனச் சொல்லப்படுகிறது.
லிங்காயத் சமூக வாக்குகள்
குறிப்பாக லிங்காயத் சமூக வாக்குகளை தக்க வைப்பதில் எடியூரப்பாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் கர்நாடக மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் உள்ளனர். எனவே லிங்காயத் வாக்குகள் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடியூரப்பாவை ஓரங்கட்டுவது தேர்தல் முடிவுகளில் பாதிப்பை உண்டாக்கும் என்பது டெல்லியின் எண்ணம்.
பாஜக வகுத்த வியூகம்
எனவே எடியூரப்பாவை சரியான முறையில் மீண்டும் பயன்படுத்தி கொள்ள பாஜக வியூகம் வகுத்துள்ளது. அதன்படி, பிரச்சாரத்தில் முக்கியமான நபராக களமிறக்க உள்ளனர். இவரது கைகளில் கட்சியின் மாநில தலைமை பொறுப்பை அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாஜகவின் உயர்நிலை அமைப்பிலும் சேர்த்துள்ளனர்.
விஜயேந்திரா ஆதிக்கம்
இதனை உணர்த்தும் வகையில் ஷிவமொக்காவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எடியூரப்பாவிற்கு பாராட்டு மழை பொழிந்தார். எடியூரப்பா வருகையால் அவரது மகன் விஜயேந்திராவின் ஆதிக்கம் அதிகமாகும் என்பது சீனியர்கள் கருத்து. ஆனால் இவரது நடவடிக்கைகள் கடந்த காலங்களில் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
கடுப்பில் சமூகத் தலைவர்கள்
குறிப்பாக லிங்காயத் தலைவர்களான பசன்கவுடா படில் யாட்னல், அரவிந்த் பெல்லாட், லக்ஷ்மண் சாவடி, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் மிகவும் கடுப்பில் இருக்கிறார்கள். எனவே கட்சி தலைமை விஜயேந்திராவிற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
சமாதான முயற்சியில் டெல்லி
ஒக்கலிகா சமூக தலைவர்களாக சிடி ரவி, சிபி யோகேஸ்வர், சிஎன் அஸ்வத் நாராயண் ஆகியோரும் விஜயேந்திரா வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவர் வந்தால் ஒக்கலிகா வாக்குகளை பெறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
மேலும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் வி.சோமன்னா, விஜயேந்திரா வந்தால் பாஜகவை விட்டே போய்விடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளாராம். இதுபற்றி தகவலறிந்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.