தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவி வரும் வதந்தியும், இதுதொடர்பாக இந்தி நாளிதழ்கள் மீது வழக்குப்பதிவு செய்ததும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தவறான தகவல்களை சுட்டிக் காட்டியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக மீது டார்கெட்
மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த அறிக்கையில் திமுக எம்.பிக்கள், கூட்டணி கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இவர்களின் நடவடிக்கைகள் த்வட இந்தியர்களை வெளியேற்ற கோரும் நிலைக்கு தூண்டியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை சவால்
இதையடுத்து தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்ட அண்ணாமலை, வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.
24 மணி நேரம் கெடு
பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள் என்று சவால் விடும் வகையில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவை போட்டு சுமார் 24 மணி நேரம் ஆகியும் அண்ணாமலை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கே.சி.பழனிசாமி பிளாஷ்பேக்
இதற்கு கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தனது ட்விட்டரில், கைது செய்துபார் என்றார் கலைஞர். சிறையில் அடைத்தார் எம்.ஜி.ஆர். தொட்டுப் பார் என்றார் ராமதாஸ். சிறையில் அடைத்தார் அம்மா. முடிந்தால் கை வைத்துப்பார் என்கிறார் அண்ணாமலை. தன்னை நிரூபித்துக் காட்டுவாரா முதல்வர்
மு.க.ஸ்டாலின்
எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மீது விமர்சனம்
அதாவது அதிமுகவின் இருபெரும் தலைவர்களை உயர்வாக பேசி, திமுகவை வம்புக்கு இழுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதேசமயம் BJP Fails என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இது அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகளை விமர்சிப்பது போல் அமைந்துள்ளது. கே.சி.பழனிசாமியை பொறுத்தவரை ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரையும் விமர்சனம் செய்து கட்சியில் இருந்து வெளியேறியவர்.
திமுக செய்து காட்டுமா?
இருப்பினும் ஒன்றுபட்ட அதிமுகவின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அவ்வப்போது தன்னையும் ஒரு தலைவராக முன்னிறுத்தும் வகையில் அதிமுகவின் அரசியல் அதிரடிகளை நினைவுபடுத்தி வருகிறார். அந்த வகையில் அதிமுகவை போல் திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? எனச் சீண்டும் வகையில் கே.சி.பழனிசாமி பதிவிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.